சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ முதல் நிமிடம்

பாசமுள்ள பார்வையில்.. தாயின் கைம்மாறு கருதா அன்பு

ஓய்வுபெற்ற விவசாயி யசுஹிரோ தன் 89 வயது நிரம்பிய தாய்க்காக கிட்டார் வாசிக்கிறார் - EPA

11/05/2017 15:47

ஜப்பான் நாட்டில் பழங்காலத்தில் விநோதமான ஒரு பழக்கம் இருந்து வந்தது. பெற்றோர்கள் முதுமையடைந்து, மற்றவர்களுக்கு எந்தவித நன்மையுமே செய்ய முடியாது என்ற ஆற்றாமை நிலையை எட்டும்போது, அவர்களை உயரமான ஒரு மலைக்குக் கொண்டுபோய் வைத்துவிடும் பழக்கம் அது. அந்த மலையில், அந்த வயதான பெற்றோர் எதுவுமே செய்ய இயலா நிலையில், தனிமையில், பசி தாகத்தால் வாடி வதங்கி மடிந்து போவார்கள். இப்படி ஒரு மகன், தன் வயதான தாயை ஓர் உயரமான மலையில் விட்டுவிடுவதற்காக, மரங்கள் சூழ்ந்த காட்டுப் பகுதி வழியே தூக்கிக்கொண்டு சென்றான். அவ்வாறு செல்லும்போது, அந்தத் தாய், வழியில் மரக்கிளைகளை ஒடித்துப் போட்டுக்கொண்டே சென்றார். அப்போது அந்த மகன் தாயிடம், ஏனம்மா இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்டான். அதற்கு அந்தத் தாய், மகனே, நீ என்னை மலை உச்சியில் விட்டுவிட்டு திரும்பி வரும்போது வழியைத் தவறவிடாமல், பாதுகாப்பாக வீடு போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்கிறேன் என்றார். தனியே பரிதவிக்கவிட்டுவிட்டு திரும்பும் மகன் பாதுகாப்பாக வீடு வந்து சேர வேண்டும் என நினைக்கும் தாயின் பாசத்தை நினைத்து, மனம் உருகிப் போனான் அந்த மகன். அதற்குப் பிறகு, அவன் தன் தாயை வீட்டுக்குச் சுமந்துவந்து பாசத்தோடு பராமரித்து வந்தான். இந்த நிகழ்வோடு ஜப்பானில் நிலவிவந்த அந்தக் கொடூரப் வழக்கம் நின்றுபோனது.

தன் பிள்ளை நல்லவனா, கெட்டவனா என அறிவதற்கு முன்னரே, தன் வயிற்றில் கருவாக வளர அனுமதிப்பவர் தாய். வாழ்வில் எவ்வளவு பணம் சேர்த்தாலும், இருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாத இடம் ஒன்று உண்டு என்றால், அது தாயின் கருவறைதான். எவ்வளளோ துன்பங்கள், அவமானங்கள் மத்தியிலும், தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை, எச்சூழ்நிலையிலும் கைவிடாமல் இருப்பதே, பிள்ளை தாய்க்குச் செய்யும் கடனாகும்    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

11/05/2017 15:47