சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

போர்த்துக்கீசிய மக்களுக்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி

போர்த்துக்கீசிய மக்களிடம் காணொளி வழியாகப் பேசுகிறார் திருத்தந்தை - AP

11/05/2017 16:18

மே,11,2017. மரியன்னையின் திருத்தலத்தில் நாம் சந்திக்கவிருப்பதை எண்ணி, மகிழ்வு கலந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர்த்துக்கல் நாட்டு மக்களுக்கு அனுப்பிய ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா திருத்தலத்தில், மரியன்னை காட்சி கொடுத்த 100ம் ஆண்டை சிறப்பிக்க, மே 12, 13, இவ்வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள், அங்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, போர்த்துகீசிய மொழியில், இப்புதனன்று அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

போர்த்துக்கல் நாட்டின் ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு இல்லமும், தன்னை வரவேற்றிருப்பது தெரிந்தாலும், இம்முறை, தன் பயணம் பாத்திமா திருத்தலத்தில் மட்டும் நிகழ்வதற்கு தன் வருத்தத்தை, இச்செய்தியில் துவக்கத்தில் கூறியுள்ளார் திருத்தந்தை.

உலக சமுதாயத்தின் மேய்ப்பர் என்ற முறையில் தான் மரியன்னையின் பிரசன்னத்தில் நிற்கும்போது, போர்த்துக்கல் மக்கள் தன்னுடன் மனதால் ஒன்றித்து நிற்குமாறு, திருத்தந்தை இச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

தன் மாசற்ற இதயம், ஒரு புகலிடமாகவும், இறைவனிடம் அழைத்துச் செல்லும் பாதையாகவும் அமைந்திருக்கும் என்ற உறுதிமொழியை, போர்த்துக்கல் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் செவியிலும் மரியன்னை சொல்லவேண்டும் என்பது தன் செபமாக அமையும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

"மரியன்னையுடன், நம்பிக்கையிலும், அமைதியிலும் ஒரு திருப்பயணியாக நான் வருகிறேன்" என்பதை தன் திருத்தூதுப் பயணத்தின் மையக் கருத்தாக கொண்டுள்ளதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியில் நினைவுறுத்தி, இப்பயணத்திற்கு ஏற்பாடுகள் செய்துள்ள அனைவருக்கும் தன் ஆழ்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

11/05/2017 16:18