2017-05-11 16:27:00

திருத்தந்தை : இலத்தீன் அமெரிக்காவில், ஊழல் என்ற புற்றுநோய்


மே,11,2017. தென் அமெரிக்கக் கண்டத்தின் பல நாடுகளை இன்று பீடித்துள்ள நோய், ஊழல் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆயர் பேரவை பிரதிநிதிகளுக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆயர் பேரவைகளின் ஒருங்கிணைப்பு அமைப்பான CELAM என்றழைக்கப்படும் உயர்மட்டக்குழு, மே 9, இச்செவ்வாய் முதல், 12, இவ்வெள்ளி முடிய எல் சால்வதோர் நாட்டில் மேற்கொள்ளும் 36வது கூட்டத்திற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி, இக்கூட்டத்தின் ஆரம்ப அமர்வில் வாசிக்கப்பட்டது.

புற்றுநோய்போல பரவியிருக்கும் ஊழல், தென் அமெரிக்க மக்களை, வறுமையின் கொடிய பிடிக்குள் ஒவ்வொரு நாளும் தள்ளி, அவர்கள் வாழ்வை நிலையற்றதாக மாற்றிவிடுகிறது என்று திருத்தந்தை இச்செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

300 ஆண்டுகளுக்கு முன், எளிய மீனவர்களால் கடலிலிருந்து மீட்கப்பட்ட Aparecida அன்னை மரியா, பிரேசில் நாட்டின் பாதுகாவலரானார் என்பதை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அந்த அன்னையின் பரிந்துரை, இலத்தீன் அமெரிக்காவில் வாழும் ஒவ்வொருவருக்கும் தேவை என்று எடுத்துரைத்தார்.

சகதியிலிருந்து மீட்கப்பட்ட Aparecida அன்னை மரியா, இன்றும், மக்களின் துயரங்கள், போராட்டங்கள் என்ற சகதியில் அவர்களோடு உடன் நிற்கிறார் என்பதை, திருத்தந்தை தன் செய்தியில் சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்.

"எளியோருக்காக, ஓர் எளியத் திருஅவை" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் CELAM கூட்டத்தில், இலத்தீன் அமேரிக்கா, மற்றும் கரிபியன் தீவுகளைச் சேர்ந்த 21 நாடுகளின் பிரதிநிதிகளான ஆயர்கள் கலந்துகொள்கின்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.