2017-05-11 16:33:00

பாத்திமா அன்னைக்கென, ஆசியாவில் அமைக்கப்பட்ட முதல் திருத்தலம்


மே,11,2017. பாத்திமா அன்னையின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ் நாட்டின் பாளையங்கோட்டை மறைமாவட்டம், நாலாங்கட்டளை பங்கிற்குட்பட்ட தாழையூத்து மறைபரப்புத் தளத்தில், பாத்திமா அன்னையின் பெயரால் புதிதாக எழுப்பப்பட்டுள்ள ஓர் ஆலயத்தை, பாளை ஆயர், ஜூடு பால்ராஜ் அவர்கள், மே 13 இச்சனிக்கிழமை மாலை, அர்ச்சித்து, திறந்து வைக்கிறார்.

63 அடி உயர கோவில் முகப்பைக் கொண்டுள்ள இவ்வாலயத்தின் அடிக்கல், 2015ம் ஆண்டு, சனவரி 26ம் தேதி நாட்டப்பட்டது என்றும், இவ்வாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னையின் திரு உருவம், பாத்திமா நகரிலிருந்து வரவழைக்கப்பட்டது என்றும், நாலாங்கட்டளை பங்கு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

மேலும், பாத்திமா அன்னைக்கென, ஆசியாவில் முதன் முதலாக அமைக்கப்பட்ட திருத்தலம் ஒன்றில், மே 13, இச்சனிக்கிழமை, மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றுவார் என்று, ஆசிய செய்தி கூறியுள்ளது.

இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் கர்ஜத் (Karjat) என்ற ஊரில், பாத்திமா அன்னையின் பெயரால், 1935ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்திருத்தலத்தில், இந்த நூற்றாண்டு நினைவாக புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒரு பீடத்தை, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் அர்ச்சித்து, திருப்பலி நிறைவேற்றுகிறார்.

1917ம் ஆண்டு பாத்திமாவில் அன்னை மரியா தோன்றிய நிகழ்வையடுத்து, இந்தியாவுக்கு 1920ம் ஆண்டு சென்ற போர்த்துகீசிய வர்த்தகர்கள், அன்னையின் உருவச் சிலையை அங்கு கொண்டு சென்றனர் என்றும், அச்சிலையை மையப்படுத்தி அமைந்த திருத்தலம் 1935ம் ஆண்டு முதல் மக்களை ஈர்த்து வந்துள்ளது என்றும் ஆசிய செய்தி மேலும் கூறுகிறது.

மே 13, இச்சனிக்கிழமை, இத்திருத்தலத்தில் நடைபேறும் விழா திருப்பலியில் கலந்துகொள்ள, நாசிக், பூனே, வசாயி, மும்பை, கல்யாண் ஆகிய ஐந்து மறைமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கூடி வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.