2017-05-13 16:45:00

பாசமுள்ள பார்வையில்.. சூரியனின் அற்புதப் புதுமை


ஐரோப்பா எங்கும், முதல் உலகப் போர் தீவிரமாய் நடந்துகொண்டிருந்த காலம் அது. அச்சமயத்தில், போர்த்துக்கல் நாடு, நடுநிலை வகிக்க இயலாமல், நேச நாடுகளுடன் போரில் இணைந்தது. ஏனென்றால், போர்த்துக்கல் நாடு, ஆப்ரிக்காவில் தன் காலனி நாடுகளைப் பாதுகாக்கவும், பிரித்தானியாவோடு வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்தவும் வேண்டியிருந்தது. இப்போரில், ஏறக்குறைய இரண்டு இலட்சத்து இருபதாயிரம் போர்த்துக்கல் குடிமக்கள் இறந்தனர். கடும் உணவு பற்றாக்குறை மற்றும், இஸ்பானிய காய்ச்சலால் ஆயிரக்கணக்கில், மக்கள் துன்புற்றனர். அதோடு அந்நாட்டில் 18ம் நூற்றாண்டில், கத்தோலிக்கத்திற்கு எதிரான அடக்குமுறைகள் இடம்பெற்றன. 1911ம் ஆண்டுக்கும், 1916ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஏறக்குறைய இரண்டாயிரம், அருள்பணியாளர்கள், துறவிகள் மற்றும், அருள்சகோதரிகள் கொல்லப்பட்டனர்.  இச்சூழலில், 1917ம் ஆண்டு மே 13ம் தேதி, போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில் லூசியா, பிரான்சிஸ்கோ, ஜசிந்தா ஆகிய மூன்று இடையர் சிறாருக்கு அன்னை மரியா முதல் முறையாக காட்சியளித்து, மக்கள் கடவுள்பக்கம் திரும்ப வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். இச்சிறார், அன்னை மரியாவின் இக்காட்சி பற்றி, ஊர் மக்களிடம் தெரிவித்தபோது பலர் அதை நம்ப மறுத்தனர். முதல் காட்சியில் அன்னை மரியா கேட்டுக்கொண்டபடி, இச்சிறார் தொடர்ந்து அதே தேதியில் அதே இடத்திற்கு வந்தனர். ஜூலை 13ம் தேதி, மூன்றாவது முறையாக இடம்பெற்ற காட்சியின்போது லூசியா அன்னைமரியாவிடம், இக்காட்சியை மக்கள் நம்புவதற்கு ஒரு புதுமை வேண்டும் என்று கேட்டார். அச்சமயத்தில் அன்னைமரியா உறுதியளித்தபடி, அக்டோபர் 13ம் தேதியன்று அந்தப் புதுமை நடந்தது. அச்சிறாருடன் ஏறக்குறைய எழுபதாயிரம் பேர் கூடியிருந்தனர். எல்லாரும் செபமாலை செபித்துக்கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அன்னை மரியா அச்சிறாருடன் சிறிது நேரம் பேசிய பின்னர், தனது ஒளி சூரியனின் மீது வீசச் செய்தார். அதற்குமுன் கொட்டிக்கொண்டிருந்த பருவமழை நின்றது. வானம், பலவண்ணங்களால் ஒளிர்ந்தது. சூரியன் விண்ணில் அங்குமிங்கும் அசைந்தாடியது. ஒரு கட்டத்தில் சூரியன் பூமியின்மீது விழுவதுபோல் ஆடி, பின் அதன் இடத்தை அடைந்தது. சூரியனின் அற்புதம் என்ற, இப்புதுமையை அங்கிருந்தவர்கள் தவிர, மற்றவர்களும் பார்த்து அதிசயித்துள்ளனர். இது, அக்காலத்திய கடவுள் மறுப்புக்கொள்கை கொண்டிருந்த அரசுகளுக்கு ஒரு சவாலாக இருந்தது. இப்புதுமை, அன்னை மரியா பாத்திமாவில் அளித்த காட்சியையும், அவர் உலகுக்கு விடுத்த செய்தியையும் மக்கள் நம்புவதற்கு காரணமானது. 1917ம் ஆண்டில் ஆறுமுறை அன்னை அளித்த அக்காட்சிகளில் கூறியவை நிறைவேறியுள்ளன என்று சொல்லலாம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.