2017-05-13 14:30:00

பாத்திமா அன்னைக்கு முன் திருத்தந்தை எழுப்பிய செபம்


மே,13,2017. வாழ்க, புனித அரசியே! பாத்திமாவின் புனித கன்னியே! மாசற்ற இதயம் கொண்ட பெண்மணியே! எங்கள் தஞ்சமே, இறைவனுக்குச் செல்லும் எங்கள் வழியே!

உமது கரங்களிலிருந்து வரும் ஒளியின் திருப்பயணியாக வந்துள்ள நான், மனித வரலாற்றின் ஒவ்வொரு இடத்திலும், நேரத்திலும் உழைக்கும் தந்தையாம் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.

அமைதியின் திருப்பயணியாக, எங்கள் அமைதியாக விளங்கும் கிறிஸ்துவை நான் புகழ்கிறேன். உலகின் அனைத்து மக்களும் ஒரே மனமுடையோராய் வாழ வேண்டுகிறேன்.

நம்பிக்கையின் திருப்பயணியாக, ஓர் இறைவாக்கினராக, தூதராக, அனைவரின் காலடிகளைக் கழுவ வந்துள்ளேன்.

மக்களின் வாழ்த்தொலி பல்லவி:

இரக்கம் நிறைந்தவரே, பக்தி மிகுந்தவரே வாழ்க!

பாத்திமாவின் செபமாலை அரசியே வாழ்க!

இனிமையான கன்னி மரியாவே, வாழ்க!

திருத்தந்தை:

வாழ்க, இரக்கத்தின் அன்னையே! வெண்ணிற ஆடை உடுத்திய பெண்மணியே!

நூறு ஆண்டுகளுக்கு முன், இவ்விடத்தில், இறைவனின் இரக்கத்தை அனைவரும் அறியும்படி செய்தீர்.

உமது ஒளிமிகுந்த உடையைப் பார்க்கிறேன். வெண்ணிற உடை உடுத்திய ஆயர் என்ற முறையில், திருமுழுக்கு என்ற ஒளியால் உடுத்தப்பெற்று, இறைவனில் வாழவும், அமைதியைப் பெறவும், கிறிஸ்துவின் மறையுண்மைகளைச் செபிக்கும் அனைவரையும் இங்கு நினைவுகூருகிறேன்.

மக்களின் வாழ்த்தொலி பல்லவி:

திருத்தந்தை:

வாழ்வே, இனிமையே, வாழ்க! எங்கள் நம்பிக்கையே வாழ்க!

திருப்பயணியான கன்னியே, உலகின் அரசியே,

வானக இல்லத்தை நோக்கி பயணம் செய்யும் ஆண், பெண் அனைவரின் மகிழ்வை, உமது மாசற்ற இதயத்தில் வைத்திருப்பவரே!

கண்ணீர் பள்ளத்தாக்கில் அழுது புலம்பும் மனித குடும்பத்தின் துயரங்களை, உமது மாசற்ற இதயத்தில் வைத்திருப்பவரே!

நீர் திருப்பயணியாக இருந்ததுபோல், உமது மகுடத்தின் ஒளியால் எங்களை அழகுபடுத்தி, எங்களையும் திருப்பயணிகளாக மாற்றியருளும்.

கன்னிமை குன்றாத உம் புன்சிரிப்பால், திருஅவையின் மகிழ்வை வாழவைத்தருளும்.

உயர்த்திய கரங்களோடு நீர் எழுப்பும் செபத்தால், அனைத்து மக்களையும் ஒரே மனித குடும்பத்தில் இணைத்தருளும்.

மக்களின் வாழ்த்தொலி பல்லவி:

திருத்தந்தை:

இரக்கமும், அன்பும், இனிமையும் நிறைந்த கன்னி மரியே! பாத்திமாவின் செபமாலை அரசியே!

அருளாளர்களான பிரான்சிஸ்கோ, ஜசிந்தா மற்றும் நற்செய்தியை பறைசாற்ற தங்களையே அர்ப்பணித்துள்ளோரின் எடுத்துக்காட்டுகளை நாங்களும் பின்பற்ற உதவியருளும். இவ்வாறு, நாங்கள், எங்கள் திருப்பயணத்தில் எதிர்கொள்ளும் சுவர்களைத் தகர்த்து, எல்லைகளைக் கடந்து, சமுதாய விளிம்புகளில், இறைவனின் நீதியையும், அமைதியையும் அறியச் செய்வோமாக.

செம்மறியின் இரத்தத்தால், இன்றைய உலகின் போர்களில் சிந்தப்படும் இரத்தத்தால் கழுவப்பெற்ற வெண்ணாடை அணிந்த திருஅவையாக நாங்கள் விளங்குவோம்.

இறைவன் வாழ்கிறார், மக்கள் நடுவே வாழ்கிறார்; நேற்றும், இன்றும், என்றும் வாழ்கிறார் என்பதை ஒளிமிகுந்த தூணாக நீர் வெளிப்படுத்தியதைப்போல், நாங்களும் ஒளிமிக்க தூண்களாக இருப்போமாக!

மக்களின் வாழ்த்தொலி பல்லவி:

திருத்தந்தை:

ஆண்டவரின் அன்னையே! பெண்களுள் ஆசீர் பெற்றவரே!

நீரே அனைத்து தீமைகளையும் வெல்பவர், நீரே, எம் மக்களின் மாண்பு.

இரக்கம் நிறைந்த தந்தையின் அன்பை எடுத்துரைக்கும் இறைவாக்கே, மகனின் நற்செய்தியைச் சொல்லித்தரும் ஆசானே,

உமது மாசற்ற இதயம், பாவிகளுக்கு அடைக்கலமாகவும், இறைவனிடம் அழைத்துச் செல்லும் வழியாகவும் இருக்கட்டும்.

என் சகோதர, சகோதரிகளுடன் ஒன்றித்து, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய புண்ணியங்கள் வழியே என்னையே உம்மிடம் கையளிக்கிறேன். என்னையே இறைவனுக்கு அர்ப்பணமாக்குகிறேன்.

பாத்திமாவின் செபமாலை கன்னியே,

இறுதியாக, உமது கரங்களிலிருந்து வரும் ஒளியால் சூழப்பட்டு, நான் ஆண்டவரை என்றென்றும் மகிமைப்படுத்துவேன். ஆமென்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.