2017-05-15 16:58:00

உலக அமைதி என்பது, மேலிருந்து வழங்கப்படும் கொடை


மே,15,2017. உலகில் அமைதியை நிலைநாட்ட உழைக்கும் அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவிப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இராணுவத்தில் ஆன்மீகப் பணியாற்றுவோருக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டு, லூர்து திருத்தலத்தில், மே 19ம் தேதி முதல், 21ம் தேதி முடிய நடைபெறும் அனைத்துலக இராணுவ ஆன்மீகப் பணியாளர்கள் திருப்பயணத்தில் கலந்துகொள்ளும் திருப்பயணிகளுக்கு, திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

உலக அமைதி என்பது, விண்ணகத் தந்தையிடமிருந்து நமக்கு வழங்கப்படும் ஒரு கொடை என்றும், இக்கொடையைப் பெறுவதற்கு நாம் இடைவிடாமல் மன்றாடவேண்டும் என்றும் திருத்தந்தையின் செய்தி விண்ணப்பித்துள்ளது.

போர்ச் சூழலில் உயிரைப் பணயம்வைத்து பணியாற்றும் அனைவரையும் லூர்து மரியன்னை தன் பரிந்துரையால் காத்தருள வேண்டுமென திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

'அமைதியை எங்களுக்குத் தாரும்' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பன்னாட்டுத் திருப்பயணத்தில், 40 நாடுகளைச் சேர்ந்த 12,000த்திற்கும் அதிகமான இராணுவ வீரர்கள், மற்றும், இராணுவ ஆன்மீகப் பணியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.