2017-05-15 17:16:00

துன்புறும் மக்களை, அன்னைமரியின் பாதுகாவலில் ஒப்படைத்தல்


மே,15,2017. இன்றைய உலகில், குறிப்பாக மத்தியக் கிழக்குப்பகுதியில் போராலும் மோதல்களாலும் துன்புறும் மக்களை, அமைதியின் அரசியாம் அன்னைமரியின் பாதுகாவலில் ஒப்படைப்பதாக அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் பாத்திமா திருத்தல திருப்பயணத்தை நிறைவுசெய்து, மே 13, சனிக்கிழமை இரவு உரோம் நகர் திரும்பியபின், மே 14, இஞ்ஞாயிறு நண்பகல், தூய பேதுரு பேராலய வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு வழங்கிய அல்லேலுயா வாழ்த்தொலி உரையில் இவ்வாறு கூறினார்.

சிரியா, ஈராக் மற்றும் ஏமனில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் துன்பநிலைகள் குறித்து தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் மற்றும் யாசிதி எனப்படும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என அப்பகுதியில் துன்புறும் அனைத்து மக்களோடும் தன் செப நெருக்கத்தை வெளியிடுவதாகவும், அப்பகுதியின் மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்ற தன்னலமின்றி பணியாற்றும் அனைத்து மக்களுக்கும் தன் ஊக்கத்தை வழங்குவதாகவும் கூறினார்.

மத்தியக் கிழக்குப் பகுதியிலுள்ள அனைத்து சமூகத்தினரும், அமைதி, பாதுகாப்பு மற்றும் மதிப்பை உள்ளடக்கிய பேச்சுவார்த்தை, மற்றும், சமூக நட்புணர்வின் பாதையில் நடைபோடவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் பாத்திமா திருத்தலப் பயணம் குறித்தும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, கடந்த நூறாண்டுகளாக விசுவாசிகள் நம்பிக்கையுடன் செல்லும் அத்திருத்தலத்தில், மக்கள் செபத்தில் மூழ்கியிருந்ததைக் கண்டேன், இத்தகைய மேன்மை வாய்ந்த திருத்தலத்திற்கு திருப்பயணம் மேற்கொள்ள உதவிய இறைவனுக்கு நன்றிகூறுகிறேன் என்றார்.

பாத்திமா நகரில் அன்னை மரியா சிறார்களுக்கு காட்சியளித்ததன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை, உலகின் சிறார்களை அன்னையின் பாதங்களில் ஒப்படைப்போம் எனவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.