சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறையுரைகள்

திருத்தந்தை : இயேசு அளிக்கும் அமைதியே உண்மையானது

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை

16/05/2017 16:29

மே,16,2017. உண்மையான அமைதி, மனிதரால் உருவாக்கப்படுவது அல்ல, மாறாக, இது தூய ஆவியாரின் கொடை என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறினார்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலையில், நிறைவேற்றிய திருப்பலியில், சிலுவையின்றி கிடைக்கும் அமைதி, இயேசு வழங்கும் அமைதி அல்ல என்றும், துன்பங்களின் மத்தியில் நமக்கு அமைதியை நல்க வல்லவர் நம் ஆண்டவர் மட்டுமே என்றும் திருத்தந்தை கூறினார்.

‘அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்’ என, யோவான் நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள இயேசுவின் இறுதி இரவு உணவு திருச்சொற்கள் குறித்து மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, ஆண்டவரால் வழங்கப்படும் அமைதியின் அர்த்தத்தை மையப்படுத்தி உரையாற்றினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இந்நாளின் முதல் வாசகத்தில், பவுலும், பர்னபாவும், நற்செய்தியை அறிவிக்க மேற்கொண்ட பயணங்களில், அனுபவித்த பல துன்பங்கள் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது, இயேசு வழங்கும் அமைதி, உலகு தரும் அமைதி போன்றதன்று என்றார் திருத்தந்தை.

சிலுவையைப் பார்க்காதவண்ணம் நம்மைத் தடுத்து, மயக்கத்தில் வைக்கும் ஓர் அமைதியை இவ்வுலகம் தர விரும்புகின்றது என்றும், உலகு தரும் இந்த அமைதி, துன்பங்கள் இல்லாத அமைதி என்றும், உலகு வழங்கும் செயற்கையான அமைதி, ஒருவரின் விவகாரங்கள், ஒருவரின் பாதுகாப்பு ஆகியவற்றில் மட்டுமே கருத்தாய் இருப்பது என்றும், திருத்தந்தை கூறினார்.

கடவுள் வழங்கும் அமைதி விலைக்கு வாங்கப்பட முடியாதது, சிலுவையின்றி உண்மையான அமைதி கிடையாது, கடவுள் வழங்கும் அமைதி, தொடர்ந்து நம்மை முன்னோக்கி நடத்திக்கொண்டிருப்பது, இந்த அமைதி, வாழ்வின் எதார்த்தத்தில் நுழைவது, அது வாழ்வைப் புறக்கணிக்காது, எனவே தூய ஆவியாரின் கொடையாகிய அக அமைதியைப் பெற ஆண்டவரிடம் வரம் வேண்டுவோம் என, தன் மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கோபப்படும்போது நான் அமைதியை இழக்கிறேன், எனது இதயம் கலக்கமடைந்துள்ளபோது, இயேசு தரும் அமைதிக்கு எனது இதயத்தைத் நான் திறக்கவில்லை என்ற அர்த்தமாகும், பல துன்பங்கள் வழியாகவே இறையாட்சியில் நாம் நுழைய வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

16/05/2017 16:29