2017-05-16 16:53:00

பிரெஞ்ச் புதிய அரசுத்தலைவருக்கு திருத்தந்தை நல்வாழ்த்து


மே,16,2017. பிரான்ஸ் நாட்டின் புதிய அரசுத்தலைவராகப் பணியேற்றுள்ள இம்மானுவேல் மெக்ரோன் (Emmanuel Macron) அவர்களுக்கு, செபம் மற்றும், நல்வாழ்த்தைத் தெரிவிக்கும் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவப் பாரம்பரியத்தால் அமைக்கப்பட்ட, வளமையான அறநெறி மற்றும், ஆன்மீக மரபுகளுக்கு எப்போதும் விசுவாசமாக இருந்து, நீதியும், உடன்பிறந்த உணர்வும் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு, பிரான்சின் புதிய அரசுத்தலைவர் எடுக்கும் முயற்சிகளுக்கு, இறைவனின் துணையை, தான் வேண்டுவதாக, அத்தந்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரான்ஸ் நாடு, ஐரோப்பாவுக்குள்ளும், உலகெங்கும், ஒவ்வொரு மனிதரின் மற்றும், அனைத்து மக்களின் மனித மாண்பை மதித்து, அமைதி மற்றும், பொதுநலனுக்காகத் தொடர்ந்து உழைக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், எலிசே (Elysee) மாளிகையில் அந்நாட்டின் 25வது அரசுத்தலைவராக, மே 14, இஞ்ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றார், 39 வயது நிரம்பிய இம்மானுவேல் மெக்ரோன்.

இப்பதவியேற்பு விழாவில் பேசிய மெக்ரோன் அவர்கள், உலகளவில் பிரான்சின் பெருமையை மீட்டெடுப்பேன். ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், உலக நாடுகளுக்கும், முன்பு இருந்ததைவிட வலிமையான பிரான்ஸ் தேவைப்படுகிறது. அந்த புதிய பிரான்ஸ், சுதந்திரம் மற்றும் ஒற்றுமையை உரக்க பேச வேண்டும் எனக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.