2017-05-16 17:01:00

போர்க்கால பாலியல் குற்றங்களைத் தடுக்க திருப்பீடம் முயற்சி


மே,16,2017. ஆயுத மோதல்கள் நிகழும் இடங்களில், பெண்கள் மற்றும், சிறாருக்கு எதிராக நடத்தப்படும் கொடூரப் பாலியல் குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு பன்னாட்டு சமுதாயம், உலக அரசுகளை ஊக்குவித்து உதவிபுரியபமாறு, திருப்பீடம் கேட்டுக்கொண்டுள்ளது.

“பெண்கள், அமைதி, மற்றும் பாதுகாப்பு : போர் நிகழும் இடங்களில் பாலியல் வன்முறை” என்ற தலைப்பில், ஐ.நா. பாதுகாப்பு அவையில் நடைபெற்ற பொதுவான கலந்துரையாடலில் இத்திங்களன்று உரையாற்றிய, ஐ.நா.வில் திருப்பீடப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், பாலியல் வன்முறையின் கடும் விளைவுகளைச் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய பாலியல் கொடூரத்தால், ஏராளமான பெண்கள், கணக்கிட முடியாத துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்றும், பாலியல் வன்முறை பயங்கரவாதத்தின் ஒரு கருவியாக அமைந்துள்ளது என்றும், பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.

உரையாடல் மற்றும், இடைநிலை வகித்தல் வழியாக, இப்பிரச்சனைக்குத் தீர்வுகள் காணப்பட வேண்டும், இது, போருக்குப் பின், அமைதி மற்றும், ஒப்புரவை ஏற்படுத்துவதற்கு உதவும், இந்த உரையாடலில், பெண்களின் பங்கு முக்கியமானது எனவும், வலியுறுத்திப் பேசினார் பேராயர் அவுசா.

ஐ.நா. பாதுகாப்பு அவையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், ஏறக்குறைய எழுபது பேர் தங்களின் கருத்துக்களை வெளியிட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.