2017-05-17 15:10:00

பாசமுள்ளப் பார்வையில்…............, : தாயைப் போல பிள்ளை


புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அம்மா. அவரது அன்பு மகள் ஜெனி தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட ஜெனியை அதிக பாசம் காட்டியே வளர்த்து வந்தார் அத்தாய். இருவரும் உணவு உண்ட பிறகு, "அம்மா... இந்தப் புத்தாண்டுக்கு எனக்குப் புது ஷூ வாங்கித்தாங்கம்மா, அதுவும் விலையுயர்ந்த ஷூ வேணும்...'' என்றாள் ஜெனி.

ஜெனி கேட்டபடியே, புத்தாண்டு அன்று காலை புது ஷூ வாங்கிக் கொடுத்தார் அம்மா. சிறிது நேரம் கழித்து, அந்தப் புது ஷூவை பரிசுப் பொருளாக வண்ணத்தாளில் வைத்துக் கட்டிக் கொண்டிருந்தாள் ஜெனி. இதைக் கவனித்த அம்மா, ""யாருக்கு இந்தப் பரிசைக் கொடுக்கப் போற ஜெனி?'' என்று கேட்டார்.

"அது வந்தும்மா.... அடுத்த தெருவுல இருக்கிற ராணிக்குத் தரப் போறேன். பாவம்மா அந்தப் பொண்ணு! அவகிட்ட ஒரே ஒரு ஷூதான் இருக்கு. அதுவும் கிழிஞ்சிருக்கும்மா...'' என்று தயக்கத்தோடு சொன்னாள் ஜெனி.

"ரொம்ப நல்ல காரியம் ஜெனி. கண்டிப்பாகச் செய். ஆனா, என்கிட்டே பரிசு உனக்குன்னு ஏன் பொய் சொல்லிக் கேட்டே?'' என்று அம்மா செல்லக் கோபத்துடன் கேட்டார்.

" ஒருவேளை நான் சொல்லியிருந்தா, நீங்க, அடுத்த பொண்ணுக்குத்தானே என்று மலிவான விலையில் வாங்கி வரக்கூடும். அதனாலதான் எனக்கு வேணும்னு பொய் சொன்னேன்...'' என்று துணிச்சலாகச் சொன்னாள் ஜெனி.

தன்னுடைய புத்தாண்டுப் பரிசை ராணியிடம் கொடுப்பதற்காகக் கிளம்பிச் சென்றாள் ஜெனி. ஆனால் போன சில நிமிடங்களிலேயே திரும்பி வந்தாள்.

இதைக் கவனித்த அம்மா, "என்ன ஜெனி, ராணி வீட்டுல இல்லையா? அதுக்குள்ளேயே வந்திட்டியே?'' என்றார்.

"நான் ராணிகிட்டே பரிசை கொடுக்கலைம்மா. அவுங்க வீட்டுக் கதவுகிட்ட வெச்சிட்டு ஓடி வந்துட்டேன்... ஏன்னா, நான் அந்தப் பரிசைக் கொடுத்தா ராணி ஒருவேளை வாங்கிக் கொள்வாள். ஆனால் அதுக்குப் பிறகு என்னைப் பார்க்கும்போதெல்லாம் நன்றியுணர்ச்சியோடு பார்ப்பாள். இயல்பாப் பழகமாட்டா, ஓர் உதவியாளனாகத்தான் என்னைப் பார்ப்பாள். கடவுளுக்கு, உண்டியலில் போடும் காசுக்கு விளம்பரம் தேவையா?'' என்றாள் பிஞ்சுக் குரலில் ஜெனி.

பிறருக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் தன்னைப் போலவே, தனது பதின்மூன்று வயது மகளுக்கும் இருப்பதை எண்ணி நெகிழ்ந்து போனார் அம்மா!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.