2017-05-17 16:03:00

பிரித்தானிய தேர்தலில் மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுக்க...


மே,17,2017. ஜூன் 8ம் தேதி, பிரித்தானிய பாராளுமன்றத்திற்கென மேற்கொள்ளப்படும் தேர்தலில் மக்கள், தங்கள் மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுக்கவேண்டும் என்று, இங்கிலாந்து, மற்றும் வேல்ஸ் ஆயர்கள் சுற்றுமடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஆயர்களின் மடல், மே 21, வருகிற ஞாயிறன்று, 22 மறைமாவட்டங்களைச் சேர்ந்த 2,566 பங்கு ஆலயங்களில், ஞாயிறு திருப்பலியின்போது வாசிக்கப்பட வேண்டும் என்று ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் 'பிரெக்சிட்' (Brexit) திட்டம், மனித உயிர்களுக்கு வழங்கப்படும் மதிப்பு, சுற்றுச்சூழலைக் காப்பது குறித்த நிலைப்பாடு என்ற பல அம்சங்களில் வேட்பாளர்களின் நிலைப்பாட்டை புரிந்துகொண்டு, அவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.

முக்கியமாக, குடும்ப வாழ்வைப் பாதுகாப்பது, வறியோரை வாழவைப்பது, சிறைகளில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் போன்ற கருத்துக்களில், பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை தெளிவாகப் புரிந்துகொண்டு மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று ஆயர்கள் தங்கள் மடலில் விண்ணப்பித்துள்ளனர்.

இங்கிலாந்து, மற்றும் வேல்ஸ் பகுதிகளில், கத்தோலிக்கப் பள்ளிகளில் 8,45,000த்திற்கும் அதிகமான இளையோர் கல்வி பயில்கின்றனர் என்பதை, தங்கள் மடலில் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், அரசின் தலையீட்டால், தரமான கத்தோலிக்கக் கல்வி தடைபடுவதையும் மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.