2017-05-17 15:41:00

பெத்லகேமின் 'விண்மீன் வீதி'யை புதுப்பிக்க இரஷ்யா உதவி


மே,17,2017. புனித பூமியின் பெத்லகேம் நகரிலுள்ள 'விண்மீன் வீதி'யை புதுப்பித்து, கட்டியெழுப்ப இரஷ்ய அரசு, 40 இலட்சம் டாலர்கள் நிதி உதவி வழங்கியுள்ளதென பீதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.

உலகப் பழமைக் கருவூலங்களில் ஒன்றாக, யுனெஸ்கோ (UNESCO) நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 'விண்மீன் வீதி'யைப் புதுப்பிக்கும் பணிகள், இவ்வாண்டு செப்டம்பர் மாதம் துவங்கும் என்று பாலஸ்தீன அரசு அறிக்கை விடுத்துள்ளது.

ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த வீதியின் ஒரு பக்கம் அமைந்துள்ள 'தமஸ்கு வாயில்' வழியே, புனித யோசேப்பும், குழந்தை இயேசுவைக் கருவில் தாங்கிய அன்னை மரியாவும் நுழைந்தனர் என்ற மரபுக்கதை நிலவிவருகிறது.

அண்மைய ஆண்டுகளில், இஸ்ரேல் அரசின் பிரிக்கும் சுவர் கட்டுமான திட்டத்தின் கீழ், பாரம்பரிய புகழ்மிக்க 'விண்மீன் வீதி'யும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.