சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

ஹன்டிங்டன் நோயால் துன்புறுவோரைச் சந்தித்த திருத்தந்தை

ஹன்டிங்டன் நோயால் துன்புறுவோரைச் சந்தித்த திருத்தந்தை - AP

18/05/2017 14:05

மே,18,2017. ஹன்டிங்டன் நோய் (Huntington’s Disease) எனப்படும் அரியவகை நோயினால் துன்புறுவோர், அவர்களுக்கு துணையாக இருக்கும் உறவினர், குடும்பத்தினர் அனைவரையும் தான் மனதார வாழ்த்துவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, தன்னைச் சந்திக்க வந்திருந்த ஒரு தனிப்பட்டக் குழுவினரிடம் கூறினார்.

மூளையில் உள்ள உயிரணுக்களைக் கொல்லும் அரியவகை நோயான ஹன்டிங்டன் நோயினால் துன்புறுவோர், அவர்களுக்காகப் பணியாற்றுவோர் மற்றும் அவர்களது உறவினர் என்று 1500த்திற்கும் அதிகமானோரை, இவ்வியாழன் காலை, வத்திக்கானில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

ஹன்டிங்டன் நோயைக் குறித்து உரோம் நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு கூட்டத்திற்கு, "இனி ஒளிந்துகொள்ளவேண்டாம்" என்ற பொருள்படும் “HIDDEN NO MORE!” என்ற வார்த்தைகள் மையக் கருத்தாகத் தேர்தெடுக்கப்பட்டிருப்பதை, திருத்தந்தை தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டு, பாராட்டினார்.

சில ஆண்டுகளுக்கு முன்வரை, இந்த நோயைக் குறித்த சரியான புரிதல் இல்லாததால், இந்நோய் கண்டோர் அவரது உறவினர்கள் அனைவரையும் சமுதாயம் ஒதுக்கி வைத்தது என்பதை தன் உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, இன்று அத்தகைய நிலை மாறிவருவது நிம்மதி தருகிறது என்று கூறினார்.

மனிதர்கள் ஒருவர் ஒருவரைச் சந்திப்பதற்கு, எந்த ஒரு நோயும் தடையாக இருக்கக்கூடாது என்பதை, இயேசு, தான் வாழ்ந்த காலத்தில், தன் சொற்களாலும், செயல்களாலும், தெளிவாகப் பறைசாற்றினார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

நோய்கள், மனிதர்களைத் தனிமைப்படுத்துவதற்குப் பதில், சந்திப்பிற்கு வழிகளாக அமையவேண்டும் என்று எடுத்துரைத்தத் திருத்தந்தை, நோய் உட்பட, எந்த ஒரு சூழலிலும், மனிதர்கள், தங்கள் மாண்பை இழந்துவிடுவதற்கு நாம் காரணமாக அமையக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

ஹன்டிங்டன் நோயுற்றோருக்கு மருத்துவப் பணியாற்றும் அனைவரையும் பாராட்டியத் திருத்தந்தை, இவர்கள் அனைவரும், இறைவனின் நம்பிக்கையை இவ்வுலகில் விதைக்கும் கரங்களாக செயலாற்றுகின்றனர் என்று குறிப்பிட்டார்.

மூளையில் உள்ள உயிரணுக்களைக் கொல்லும் ஹன்டிங்டன் நோய், பொதுவாக, 30 வயதிலிருந்து 50 வயதுக்குள் உருவாகும் என்றும், இதனால், நினைவுத் திறனை இழப்பது, அங்க அசைவுகளை கட்டுப்படுத்த இயலாமல் போவது போன்ற அறிகுறிகள் வெளிப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

18/05/2017 14:05