2017-05-18 13:57:00

இறையன்பை சுவைத்தவர்கள், மகிழ்வைப் பகிர்ந்துகொள்வர்


மே,18,2017. அதிகாரம், ஆடம்பரம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு காட்டப்படும் இவ்வுலக அன்பைப் போல் அல்லாமல், இயேசுவின் அன்பு, அளவற்ற வகையில் வெளிப்படுகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை நிறைவேற்றியத் திருப்பலியில் மறையுரை வழங்கினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், "என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன்" என்று இயேசு கூறும் சொற்களை மையப்படுத்தி மறையுரையாற்றினார் திருத்தந்தை.

செல்வம், சுயநலம், அதிகாரம், தற்பெருமை என்ற பலவழிகளில் நம் அன்பை வளர்த்துக்கொள்ள இவ்வுலகம் வழிகாட்டுகிறது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவை அனைத்தும் நமக்குள் உருவாக்கும் வேட்கையை நாம் உண்மை அன்பு என்று தவறாக கணித்துவிடுகிறோம் என்று எடுத்துரைத்தார்.

இறைவனின் அன்பை சுவைத்தவர்கள், அதனால் உண்டாகும் மகிழ்வை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வர் என்றும், இது ஒன்றே கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரே பணி என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஆயராக நியமனம் பெற்ற ஓர் அருள்பணியாளர், தன் தந்தையிடம் அத்தகவலைத் தெரிவித்தபோது, அவர், தன் மகனிடம், "கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, மக்களுக்கு மகிழ்வளிப்பாயாக" என அறிவுரை வழங்கினார் என்ற ஒரு நிகழ்வை தன் மறையுரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, வயது முதிர்ந்த தந்தை, கிறிஸ்தவ வாழ்வின் இருபெரும் கடமைகளைத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார் என்று கூறினார்.

மேலும், "மிகக் கடினமாக, காய்ந்துபோயிருக்கும் பாறைகள் நடுவில், மிக அழகான மலர்களை இறைவன் உருவாக்குகிறார்" என்ற அழகிய உருவகம் அடங்கிய சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை, தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.