2017-05-18 14:39:00

தென் கொரிய 'நீல மாளிகை' அரசுத்தலைவர் இல்லம் அர்ச்சிப்பு


மே,18,2017. தென் கொரியாவின் புதிய அரசுத்தலைவர், மூன் ஜே-இன் அவர்கள், 'நீல மாளிகை' என்றழைக்கப்படும் அரசுத்தலைவர் இல்லத்தில் அண்மையில் குடியேறிய வேளையில், அவ்வில்லத்தை கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவர் அர்ச்சித்தார் என்று, பீதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.

மே 13, கடந்த சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்ட பாத்திமா அன்னை திருநாளன்று, 'நீல மாளிகை'யில் குடியேறிய மூன் ஜே-இன் அவர்களையும், அவரது மனைவியையும், மூவொரு இறைவன் பங்கு கோவிலின் அருள்பணியாளர் Paul Ryu Jong-Man அவர்கள் ஆசீர்வதித்து, அவ்வில்லத்தையும் ஆசீர்வதித்தார்.

"சாலமோனைப் போல அறிவொளி பெற்று வாழ்க" என்றும்,  "ஒவ்வொரு முடிவு எடுப்பதற்கு முன்னரும் தூய ஆவியாரின் துணையைத் தேடுங்கள்" என்றும் அருள்பணி Jong-Man அவர்கள் தன் ஆசியுரையில் கூறினார் என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.

இதற்கிடையே, அரசுத் தலைவர், மூன் ஜே-இன் அவர்கள், வட கொரிய அரசுத் தலைவருடன் உரையாடல் மேற்கொள்வதையே தான் விரும்புவதாகவும், மோதல்களைத் தடுப்பது தன் முக்கிய பணியென்றும் கூறியுள்ளதாக, ஆசிய செய்தி கூறுகிறது.

அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் அவர்கள் கட்ட விழையும் ஏவுகணை எதிர்ப்பு திட்டத்திற்கு தென் கொரிய அரசு நிதி வழங்காது என்றும், அரசுத் தலைவர், மூன் ஜே-இன் அவர்கள், அறிவித்துள்ளார். 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.