2017-05-18 14:41:00

நினிவேயைக் கட்டியெழுப்ப, கிறிஸ்தவ சபைகள் இணைவது அழகு


மே,18,2017. ஈராக் நாட்டின் நினிவே சமவெளியிலிருந்து விரட்டப்பட்டு, அனைத்தையும் இழந்த கிறிஸ்தவர்கள், தங்கள் நம்பிக்கையை இழக்காமல் வாழ்வது தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று, ஈராக் நாட்டின் திருப்பீடத் தூதர் கூறினார்.

ஜோர்டன், ஈராக் ஆகிய நாடுகளில் திருப்பீடத்தின் தூதராகப் பணியாற்றும் பேராயர் அல்பெர்த்தோ ஒர்த்தேகா மார்ட்டின் (Alberto Ortega Martín) அவர்கள், கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும்தந்தை முதலாம் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு மடலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நினிவே சமவெளியை மீண்டும் கட்டியெழுப்புவதில், கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ், மற்றும் ஏனைய கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து செயலாற்றுவது மனதிற்கு நிறைவைத் தருகிறது என்று பேராயர் மார்ட்டின் அவர்களின் மடல் சுட்டிக்காட்டியுள்ளது.

மோசூல் நகரிலும், நினிவே சமவெளியிலும் மீண்டும் குடியேறும் மக்கள் காட்டும் நம்பிக்கையைத் தான் பாராட்டுவதாகக் கூறியுள்ள பேராயர் மார்ட்டின் அவர்கள், 'இறைவன் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை, உங்களிடமிருந்து யாரும் திருடிச் செல்ல விடாதீர்கள்' என்று திருத்தந்தை கூறியுள்ள வார்த்தைகளை, தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.