2017-05-18 14:18:00

மரணக் கலாச்சாரத்தை எதிர்த்து, பிலிப்பீன்ஸில் நடைபயணம்


மே,18,2017. பிலிப்பீன்ஸ் நாட்டில் பரவலாக நிலவிவரும் மரணக் கலாச்சாரத்தை எதிர்த்து, அந்நாட்டில் நடைபெறும் 21 நாள் நடைப்பயணத்தில் மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று, மணிலா பேராயர், கர்தினால், லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், விண்ணப்பித்துள்ளார்.

எந்த ஒரு குற்றமும் வாழ்வை நிராகரிக்கிறது என்று கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், போதைப்பொருள் விற்பனை, பயன்பாடு என்ற குற்றங்களைத் தடுப்பதற்கு, மரண தண்டனைகளைத் தீர்வாக்கும்போது, அதுவும், வாழ்வுக்கு எதிரான குற்றமாகவே கருதப்படும் என்று விளக்கினார்.

செபம், தவம், கலந்துரையாடல் என்ற பல முயற்சிகள் வழியே, கத்தோலிக்க மக்கள், வாழ்வை ஆதரிக்கும் வழிகளைக் கண்டுகொள்ளவேண்டும் என்று, கர்தினால் தாக்லே அவர்கள் விண்ணப்பித்தார்.

"வாழ்வுக்கான நடைப்பயணம்" என்ற தலைப்பில், மே மாத துவக்கத்தில் ஆரம்பித்த இந்த நடைப்பயணம், மே 21, வருகிற ஞாயிறன்று, மணிலாவை அடைகிறது என்று UCAN செய்தி கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.