2017-05-19 15:27:00

இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் திருஅவை மௌனம் காக்காது


மே,19,2017. இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனை, ஒரு திறந்த, புரையோடிப்போன காயம் என்பதால், இது, ஒரு சாதாரண விவகாரமாக நோக்கப்படக் கூடாது என, அப்பகுதியின் முக்கிய கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

புனித பூமியின் கத்தோலிக்க ஆயர்களின், நீதி மற்றும், அமைதி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனை, சாதாரண விவகாரமாக நோக்கப்பட்டால், கத்தோலிக்கத் திருஅவை மௌனம் காக்காது என்று  கூறப்பட்டுள்ளது.

கத்தோலிக்கத் திருஅவையின் இயல்பான விழுமியங்கள், உரையாடலை ஊக்குவிப்பதாயும், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியதாயும் உள்ளன எனவும், இதில், திருஅவையின் நிலைப்பாட்டை, எந்தவொரு குறிப்பிட்ட கட்சியோ அல்லது, கொள்கையாளரோ கட்டுப்படுத்த முடியாது எனவும், அவ்வறிக்கை கூறியுள்ளது.

அமைதிக்கும், மனிதரின் நலத்திற்கும் அச்சுறுத்தலை விளைவிக்கும் அநீதியான செயல்களை, திருஅவை எப்போதும் புறக்கணிக்கும் என்றும் கூறும் அவ்வறிக்கை, பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படுவதற்கு எப்போதும் உரையாடலை ஊக்குவிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலில், அனைத்து குடிமக்களும் கொள்கையளவில் சம உரிமைகளைக் கொண்டிருக்கின்றனர், ஆனால், உண்மையில், அரபுக் குடிமக்கள், முன்னேற்றம், கல்விவாய்ப்பு உட்பட, பல்வேறு துறைகளில் பாகுபடுத்தப்படுகின்றனர் என்றும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புனித பூமியின் கத்தோலிக்க ஆயர்களின், நீதி மற்றும், அமைதி ஆணையம், எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறையின் முன்னாள் தலைவர் முதுபெரும் தந்தை மிஷேல் சபா அவர்களின் தலைமையில் செயல்பட்டு வருகின்றது.  

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.