2017-05-19 15:41:00

பாசமுள்ள பார்வையில்...: காணாமல்போன உறவுகள்


முந்தைய இரண்டு நாட்களாக மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. அன்றுதான் வானம் ஓரளவு வெளிச்சமாகத் தெரிந்தது.

மகன் தன் தந்தையிடம் கேட்டான், 'அப்பா, இன்றைக்கு மழை வருமா?, ஏன்னா நாங்க சாயங்காலம் கிரிக்கெட் மாட்ச் வைத்திருக்கிறோம்' என்று.  தந்தை யோசித்தார், என்ன சொல்வதென்று. 'பொறுடா, செய்திகளுக்குப்பின் டிவியில் வானிலை அறிக்கைச் சொல்வார்கள்தானே' என்றார் தந்தை. வாய்தான் பதில் சொன்னதே தவிர, அவரின் எண்ணமெல்லாம், கிராமத்தில் தான் செலவிட்ட தன் இளமைப் பருவக் காலங்களைச் சுற்றியே இருந்தது.

'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடியில காயிற வத்தல எடுத்துட்டு வா' என பாட்டி கூறுவது, இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அது மட்டுமா? ஓர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தன் சித்தப்பாவின் மூத்த மகள், கணவரிடம் கோபித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது, பாட்டி அவளைப் பார்த்து, 'அந்த காலத்துல உங்க தாத்தா செய்யாத சேட்டையா, வீட்டுக்கு வீடு வாசப்படி தான்' என, இதமாக அறிவுரை கூறியதும், இன்னும் தூரத்தில் கேட்பதுபோலவே இருந்தது. அதெல்லாம் ஒரு கனவுக்காலமாகத் தெரிந்தது.

பாட்டியின் வானிலை அறிக்கையின்றி, தாத்தா, பாட்டிகளின் அனுபவக் கதைகளின்றி, வீட்டோடு ஒரு மருத்துவப் பாட்டி இன்றி, மூத்தோர் சொல் இன்றி உழன்று கொண்டிருக்கும் இன்றைய குடும்பங்களில், கீரை இல்லாத சோறும், நாகரீக வழக்கமாகிவிட்டது. மண்பானைச் சோறு, இடிந்து போன திண்ணைகள், தானியக் கிடங்கான மரக்குதிர் என்ற வரிசையில் காணாமல் போனது நம் தாத்தா, பாட்டி உறவு முறையும்தான்.

தாத்தா,பாட்டி இல்லாத வீடு இக்காலப் பெற்றோருக்கு வேண்டுமானால் சுதந்திரமாய் இருக்கலாம். ஆனால், இக்காலப் பேரப்பிள்ளைகளுக்கு கண்டிப்பாக சொர்க்கமானதாக இருக்காது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.