2017-05-20 16:03:00

திருத்தந்தையின் இரக்கத்தின் வெள்ளிக்கிழமை வியப்புக்கள்


மே,20,2017. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிவந்த வெள்ளிக்கிழமை வியப்பு நிகழ்வுகளை, மே 19, இவ்வெள்ளிக்கிழமையன்றும் ஆற்றினார்.

உரோம் நகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள ஓஸ்தியாவின் “ஸ்டெல்லா மாரிஸ்”  பங்குக்கு, இவ்வெள்ளிக்கிழமை பிற்பகலில் சென்று, பன்னிரண்டு வீடுகளை ஆசீர்வதித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வோர் ஆண்டும், இயேசுவின் உயிர்ப்பு திருவழிபாட்டுக் காலத்தில், பங்குத்தந்தையர் வீடுகளுக்குச் சென்று, குடும்பத்தினரோடு செபித்து, அவர்களை ஆசீர்வதிக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது போல், ஸ்டெல்லா மாரிஸ் பங்குத்தந்தை Plinio Poncina அவர்களுக்காக, அக்குடும்பங்கள் காத்திருந்தன.

முதலில் ஆசீர்வதிக்கச் சென்ற வீட்டில், அழைப்புமணி சப்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்த குடும்பத்தினர், திருத்தந்தையைக் கண்டு, வியப்புகலந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இம்மக்களை திருத்தந்தை ஆசீர்வதித்ததுடன், மதிய உணவுக்குப் பின், அவர்களின் ஓய்வு நேரத்தைத் தொந்தரவு செய்ததற்காக மன்னிப்பும் கேட்டார்.

திருத்தந்தையின், இரக்கத்தின் இவ்வெள்ளிக்கிழமை நிகழ்வு பற்றி அறிவித்த, திருப்பீடச் செய்தித் தொடர்பகம், திருத்தந்தை தன்னைப் பங்குத்தள மேய்ப்பராக மாற்றி, மிக எளிமையுடன், 12 வீடுகளை ஆசீர்வதித்தார், மற்றும் அக்குடும்பத்தினரோடு உரையாடி மகிழ வைத்து, செபமாலைகளையும் கொடுத்தார் என்று கூறியது.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில் ஆற்றிவந்த வெள்ளிக்கிழமை வியப்பு நிகழ்வுகளை, திருத்தந்தை தொடர்ந்து ஆற்ற விரும்புவதாகவும், திருப்பீடச் செய்தித் தொடர்பகம், கூறியது. உரோம் நகருக்கு தென்மேற்கே, இருபது மைல் தூரத்திலுள்ள ஓஸ்தியாவில், ஏறக்குறைய ஒரு இலட்சம் பேர் வாழ்கின்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.