2017-05-20 15:51:00

நாடுகளைப் பாதித்துள்ள வேலைவாய்ப்பின்மை பிரச்சனை களையப்பட...


மே,20,2017. இளையோர் மற்றும், வயது வந்தவர், தங்களின் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்குத் தடையாக இருக்கும் வேலைவாய்ப்பின்மை என்ற கடுமையான பிரச்சனை மிகவும் கவலையளிக்கின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறினார்.

Centesimus Annus-Pro Pontifice என்ற நிறுவனம், உரோம் நகரில் நடத்திய பன்னாட்டு கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட, 250 உறுப்பினர்களை,  இச்சனிக்கிழமை நண்பகலில், திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காலத்தில் காணப்படும் புதிய தொழில்நுட்ப புரட்சியின் மத்தியில், வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்து, இந்நிறுவனம் இந்நாள்களில் சிறப்புக் கவனம் செலுத்தி வருவதைக் குறிப்பிட்டுப் பேசினார்.

வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை, எவ்வித வேறுபாடின்றி கடுமையாய்ப் பாதித்துள்ளது என்றும், எதிர்காலத்திற்குப் பொறுப்பேற்பவர்களாய், இந்நிலை களையப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும்   என்றும், திருத்தந்தை கூறினார்.

அதேபோல், புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, சந்தைகளில் இடம்பெறும் மாற்றம் ஆகியவற்றோடு தொடர்புடைய சிக்கலான விவகாரங்கள் களையப்படுவதற்கு முயற்சிகள் அவசியம் எனவும், தொழிலாளரின் நியாயமான ஏக்கங்கள் பற்றி நோக்கும்போது, தனியாட்களை மட்டுமின்றி, குடும்பங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

ஏழ்மைக்கு எதிரான நடவடிக்கை குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள 2017ம் ஆண்டின் அறிக்கை பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, திருஅவையின் வளமையான பாரம்பரிய சமூகக் கோட்பாடுகளின் அடிப்படையில், இந்நிறுவனம் ஆற்றிவரும் சிறந்த பணிகளுக்குப் பாராட்டும் தெரிவித்தார்

Centesimus Annus - Pro Pontifice நிறுவனம், சமுதாயமும் பொருளாதாரமும், என்ற தலைப்பில் உரோம் நகரில் நடத்திய, மூன்று நாள் பன்னாட்டு கூட்டம், இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்தது.

Centesimus Annus - Pro Pontifice என்ற நிறுவனம், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1991ம் ஆண்டு மே முதல் தேதியன்று வெளியிட்ட, Centesimus Annus அதாவது, நூறாவது ஆண்டில் என்ற திருமடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

உலகளாவிய சமுதாயத்தில், கிறிஸ்தவ சமூகக் கோட்பாடுகள் பரவுவதை, இந்நிறுவனம் ஊக்குவித்து வருகிறது. உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன், Centesimus Annus - Pro Pontifice நிறுவனம் பயிற்சிகளையும் நடத்தி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.