2017-05-20 16:10:00

பழிவாங்கும் செயல்கள் நிறுத்தப்படுவதற்கு மன்னிப்பு அவசியம்


மே,20,2017. இயேசுவின் அன்புக் கட்டளைப்படி, கிறிஸ்தவர்கள் தங்களைப் புண்படுத்துவோரை மன்னிப்பதற்குக் கடமைப்பட்டுள்ளனர் என்று, இந்தோனேசிய தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா ஆளுனர் பசுக்கி ஜஹாஜா புர்னாமா (Basuki Tjahaja Purnama) அவர்கள், தெய்வநிந்தனை குற்றத்தின்பேரில், ஈராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக, இந்தோனேசிய சமுதாயம் பிளவுண்டு இருக்கும் ஒரு சூழலில், இவ்வாறு கூறினார், ஜகார்த்தா முன்னாள் பேராயர், இயேசு சபை கர்தினால் Julius Darmaatmaja.

உடன்பிறந்த உணர்வை வளர்த்தல் மற்றும், சகிப்பற்றதன்மையை எதிர்த்தல் என்ற தலைப்பில், யோககார்த்தாவின், சனாத்தா தர்மா கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய, கர்தினால் Darmaatmaja அவர்கள், நாட்டில் இடம்பெறும் தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கு, மன்னிக்கும் மனப்பான்மை அவசியம் என்று கூறினார்.

இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களால் உருவாக்கப்படும் பதட்டநிலைகள் மற்றும், முரண்பாடுகளால், நாடு பிளவுண்டு இருக்கும் இக்காலத்தில், காழ்ப்புணர்வும், அநீதியும், பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன எனவும், கர்தினால் Darmaatmaja அவர்கள் தெரிவித்தார்.

புனித நூல்களிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசிய கர்தினால் Darmaatmaja அவர்கள், ஒருவர் இறைவன்மீது வைத்திருக்கும் அன்பு, அயலவரை அன்புகூர்வதன் வழியாக வெளிப்படுத்தப்படுகிறது எனவும் கூறினார்.

"அஹோக் (Ahok)" என மக்களால் அழைக்கப்படும் ஆளுனர் பசுக்கி அவர்கள் விடுதலைசெய்யப்பட வேண்டும் என்பதையும், தெய்வநிந்தனை சட்டத்தில் மாற்றம் தேவை என்பதையும் வலியுறுத்தி, இந்தோனேசியாவின் முக்கிய நகரங்களில், கடந்த சில நாள்களாக அமைதிப் பேரணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.