2017-05-22 16:32:00

அணு உலை பாதுகாப்பில் மக்களின் பொறுப்புணர்வு


மே,22,2017. அணு சக்தி குறித்த விவகாரங்களில் முடிவெடுப்பதற்கு முன்னர் மக்களின் கருத்துக்களுக்கு முழு மதிப்புக் கொடுக்கப்பட வேண்டும் என தென் கொரிய ஆயர்கள் அந்நாட்டு அரசை விண்ணப்பித்துள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறைவா உமக்கே புகழ் (Laudato Si) என்ற திருமடலை மையமாக வைத்து அண்மையில் கருத்தரங்கு ஒன்றை நடத்திய தென் கொரிய ஆயர்கள், மின்சக்தி குறித்த பிரச்சனைகளில் பொது மக்களின் ஈடுபாட்டிற்கு ஊக்கமளிப்பதுடன், சுற்றுச்சூழல் நட்புறவுடன் மின்சக்தி சேமிப்பில் அவர்களின் பங்கேற்பு வரவேற்கப்பட வேண்டும் என அறிவித்தனர்.

ஜப்பானில் அணுசக்தி விபத்து இடம்பெற்ற Fukushima அணு மையத்தை அண்மையில் பார்வையிட்டுத் திரும்பிய தென் கொரிய ஆயர் பேரவை தலைவர் ஆயர் Peter Kang U-il உரைக்கையில், அணு ஆலை விபத்து என்பது, வெறும் தொழில்நுட்ப தவறு மட்டும் அல்ல, மாறாக அது மக்களின் வாழ்வையே அசைத்துப் பார்க்கக் கூடியது என்றார்.

திருத்தந்தையின் இறைவா உமக்கே புகழ் திருமடலில் கூறப்பட்டுள்ளதுபோல், அணு உலை பாதுகாப்பு குறித்த உண்மைகள், வெளிப்படையாக இருக்க வேண்டிய அதேவேளை, அவற்றைக் கண்காணிப்பதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர், தென் கொரிய ஆயர்கள்.

ஆதாரம் :  UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.