2017-05-22 16:48:00

ஐந்து புதிய கர்தினால்கள் நியமனம்


மே,22,2017. மாலி, இஸ்பெயின், சுவீடன், லாவோஸ், எல் சால்வதோர் ஆகிய நாடுகளுக்கு, ஐந்து புதிய கர்தினால்களை, இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின் அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆசியா, மற்றும், ஆப்ரிக்கா கண்டங்களிலிருந்து முறையே ஒருவர், மத்திய அமெரிக்காவிலிருந்து ஒருவர், ஐரோப்பாவிலிருந்து இருவர் என, திருத்தந்தை அறிவித்துள்ள புதிய கர்தினால்களின் பதவியேற்பு நிகழ்வு, வருகிற ஜூன் 28, சனிக்கிழமையன்று நடைபெறும் என, திருத்தந்தை கூறினார்.

உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இப்புதிய கர்தினால்கள், இப்பூமியெங்கும் பரவியிருக்கின்ற திருஅவையின் கத்தோலிக்கத்தன்மையை வெளிப்படுத்துகின்றனர் என்றும், வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளிடம் திருத்தந்தை கூறினார்.

ஜூன் 28ம் தேதியன்று கர்தினால்களாக உயர்த்தப்படும் இந்த ஐவருடன், திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 227 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய எண்பது வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆகவும் இருக்கும். இந்த 121 பேரில், 49 பேர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமனம் பெற்றவர்கள். மேலும், 106 கர்தினால்கள், எண்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்.  

ஆப்ரிக்காவின் மாலி நாட்டின் Bamako பேராயர் Jean Zerbo (73); இஸ்பெயினின் பார்செலோனா பேராயர் Juan Jose Omella (71); சுவீடன் நாட்டின் ஸ்டாக்கோம் ஆயர் Anders Arborelius (67); லாவோஸ் நாட்டின் Pakse அப்போஸ்தலிக்க பிரதிநிதி ஆயர் Louis-Marie Ling Mangkhanekhoun (73), எல் சால்வதோர் நாட்டின் சான் சால்வதோர் துணை ஆயர் Gregorio Rosa Chavez (74) ஆகியோர், புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் 29, தூயவர்கள் பேதுரு பவுல் பெருவிழாவன்று இவர்கள் எல்லாரும், திருத்தந்தையோடு இணைந்து திருப்பலி நிறைவேற்றுவார்கள். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.