2017-05-22 16:40:00

திருத்தந்தை, அயர்லாந்து குடியரசுத் தலைவர் சந்திப்பு


மே,22,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அயர்லாந்து குடியரசுத் தலைவர் மைக்கிள் ஹிக்கின்ஸ் (Michael D. Higgins), அவர்களை, இத்திங்கள் காலையில் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

திருத்தந்தையைச் சந்தித்த பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் செயலகத்தின் தலைவர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகியோரையும் சந்தித்துப் பேசினார், மைக்கிள் ஹிக்கின்ஸ்.

அயர்லாந்து  குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவு மற்றும், அந்நாட்டில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்த திருப்தி, இன்னும், இவ்விருதரப்பினருக்கும் பொதுவான விவகாரங்களாகிய மனித உரிமைகள் பாதுகாப்பு,   ஒவ்வொரு நிலையிலும் மனிதரின் மாண்பும், வாழ்வும் மதிக்கப்படல், புலம்பெயர்ந்தோர், குடியேற்றதாரர் ஏற்பு, நீடித்த நிலையான வளர்ச்சி, சுற்றுச்சூழல்  பாதுகாப்பு ஆகியவையும், இச்சந்திப்புகளின் உரையாடல்களில் இடம்பெற்றன.

இச்சந்திப்புகள் குறித்து இவ்வாறு அறிக்கை வெளியிட்ட, திருப்பீடச் செய்தித் தொடர்பகம், இளையோர் மற்றும் குடும்பங்களின் நிலைகள் குறித்து, கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன என்றும் கூறியது.

உலகளாவிய தாராளமயமாக்கலால் எதிர்கொள்ளப்படும் சவால்கள், வருங்கால ஐரோப்பாவைக் கட்டியெழுப்புதல் போன்ற விவகாரங்களும், இக்கலந்துரையாடலில் இடம்பெற்றன என, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்தது.

 

மேலும், இத்திங்கள் காலையில், மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் 18 ஆயர்களை, அத் லிமினா சந்திப்பையொட்டி, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.