2017-05-22 15:59:00

திருத்தந்தை - தூய ஆவியாருக்கு இதயத்தைத் திறங்கள்


மே,22,2017. இயேசுவே ஆண்டவர் என்று சொல்வதற்கு நமக்குக் கற்றுத்தர வல்லவர்  தூய ஆவியார் மட்டுமே என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் காலை நிறைவேற்றியத் திருப்பலியில், மறையுரை வழங்கினார்.

“நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம், நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன், தூய ஆவியாராம் துணையாளரை உங்களுக்கு அனுப்புவேன், அவர், தந்தையிடம் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்…” என, இயேசு இறுதி இரவு உணவின்போது தம் சீடர்களுக்கு ஆற்றிய நீண்ட உரையை மையப்படுத்தி, இத்திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய ஆவியாருக்குச் செவிமடுக்கும் வண்ணம், நாம் நம் இதயங்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும், இதன் வழியாக நாம் கிறிஸ்துவுக்குச் சான்று பகர முடியும் என, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவால் நாம் மீட்கப்படுவோம் என்பதற்கு உறுதி வழங்கும் தூய ஆவியாராம் துணையாளர் பற்றி, தனது மறையுரையில் சிறப்பாக கவனம் செலுத்திய திருத்தந்தை, இயேசுவின் கொடையாகிய தூய ஆவியார், திருஅவையின் தோழராகப் பயணம் செய்கிறார் என்றும் கூறினார்.

தூய ஆவியார் இன்றி, இயேசுவே ஆண்டவர் என, நம்மில் யாருமே சொல்ல முடியாது, அதை ஏற்று வாழ முடியாது என்றும், தூய ஆவியாருக்கு நாம் இதயங்களைத் திறக்காவிடில், அவரால் அங்கு நுழைய முடியாது என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.

நம் இதயங்கள் உண்மையிலேயே, தூய ஆவியாருக்குத் திறக்கப்பட்டுள்ளனவா எனவும், தூய ஆவியாரின் ஏக்கங்களையும், அவர் நம் இதயங்களில் சொல்வதையும் கேட்பதற்கு நாம் முயற்சிக்கின்றோமா எனவும், நம்மையே நாமே கேட்டுக்கொள்வோம் என, திருப்பலியில் கலந்துகொண்ட விசுவாசிகளிடம் கூறியத் திருத்தந்தை, தூய ஆவியாருக்கு நம் இதயங்களைத் திறப்பதற்கு ஆண்டவரிடம் அருளை மன்றாடுவோம் எனவும் கூறினார்.

மேலும், “பிறர் இல்லாமலும், பிறருக்கு மேம்பட்டவர்களாக, அல்லது பிறருக்கு எதிரானவராக வாழாமல், பிறரோடும், பிறருக்காகவும் வாழ்வதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், இத்திங்களன்று வெளியாயின. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.