2017-05-22 16:38:00

தூய ஆவியாரை இதயத்தில் பாதுகாத்துக்கொள்ள திருத்தந்தை அழைப்பு


மே,22,2017. தூய ஆவியார், இனிமையும், மதிப்பும் நிறைந்த ஒரு சிறப்பு மொழியை நம்மிடம் பேசுகிறார், இவரின் இந்த மொழி, கிறிஸ்தவர்கள் என்பதை நம் எண்ணத்தில்  வெளிப்படுத்த வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு திருப்பலியில், மறையுரை வழங்கினார்.

உரோம் நகரிலுள்ள புனித பீட்டர் தமியான் (San Pier Damiani ai Monti di San Paolo) பங்கிற்கு, இஞ்ஞாயிறு மாலையில் சென்று, புதுநன்மைக்குத் தயார் செய்யும் 80 சிறார், ஏறக்குறைய நூறு இளையோர் உட்பட பல்வேறு குழுவினரைச் சந்தித்து திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, நாம் பெற்றுள்ள தூய ஆவியாரைக் காத்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி மறையுரையாற்றினார்.

கோபமும், கசப்புணர்வும் தீயவனின் தூண்டுதலால் வருபவை, இவை, பொறாமையினால் வெளிப்படுபவை, பிளவுகளை உருவாக்கும் இந்தப் போக்கு, நம் கிறிஸ்தவ சமூகங்களில் பரவலாகக் காணப்படுகின்றது என்றும், திருத்தந்தை தெரிவித்தார்.   

இந்தவிதப் போக்கு, உண்மையிலேயே என் இதயத்தைக் காயப்படுத்துகின்றது, நாம் ஒருவர் ஒருவர் மீது கற்களை எறிவதுபோல் இது உள்ளது, தீயவன் இதனால் ஆனந்தமடைகின்றான், இது தூய ஆவியாரைக் கேலிக்கு உட்படுத்துவதாகும் என்றும், திருத்தந்தை, மறையுரையில் கூறினார்.   

கடவுளின் தூய ஆவியாருக்குத் துயரம் வருவிக்காமல் இருக்கவும், நம்மிலுள்ள ஆவியானவரைக் காத்துக்கொள்ளவும் அருள்வேண்டி மன்றாடுவோம் என்றும், இனிமையாகப் பேசும் மற்றும், பிறரை மதிக்கும் பண்பை வளர்த்துக்கொள்வோம் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

தூய ஆவியார் நம்மிடம் நடந்துகொள்வது போன்று, பிறரை எப்போதும் கனிவுடனும் மதிப்புடனும் நடத்துமாறும், புறங்கூறுதலை விலக்கி நடக்குமாறும் புனித தமியான் பங்கு மக்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித பீட்டர் தமியான் இறந்ததன் 900மாம் ஆண்டையொட்டி, அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் 1972ம் ஆண்டிலும், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால், 1988ம் ஆண்டிலும் இந்தப் பங்கிற்குச் சென்றுள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.