2017-05-22 15:48:00

வாரம் ஓர் அலசல் – நன்மைக்குப் பயன்படுத்துவோம் நாவை!


மே,22,2017. அந்த ஆளுக்கு பேசத் தெரியாது, அவருபாட்டுக்கு எல்லா இடத்துலயும் எதையாவது உளறி, எல்லார்க்கிட்டேயும் வாங்கிக் கட்டுறாரு... நாகரீகமாக பேசவே தெரியாது.. ஒருத்தரை இன்னிக்கு முட்டாள்னு சொல்வார், அடுத்த நாள் அந்த நபருக்கிட்டேயே போய், நீங்க ரொம்ப நல்லவரு என்பார், இந்த ஆளுக்கு நாக்கு கொஞ்சம் நீளம். இப்படியெல்லாம் சிலர் பற்றி நாம் சொல்வதுண்டு. ஒரு நாளில் முட்டாள் எனச் சொன்ன நபரிடம், அடுத்த நாள் சென்று, ஜயா, என் வாய், தெரியாமல் எதையோ உளறிவிட்டது. என்னை மன்னித்துவிடுங்கள், நீங்கள் மிகவும் அறிவாளி என்பதை தெரியாமல் இருந்து விட்டேன் எனச் சொல்ல முடியுமா? இப்படி நேரத்துக்கு ஒன்று பேசுவது, ஒருவேளை சில மேடைகளுக்கு ஒத்துவரலாம். ஒருநாள் ஒலிவாங்கியைப் பிடித்து ஒருவரை, பண்பாடற்ற வார்த்தைகளால் சாடிவிட்டு, சிலநாள் சென்று, அதே நபரை வாயார வாழ்த்துவது ஒரு சிலருக்குப் பழக்கமாக இருப்பதைக் கண்டு வருகிறோம். தங்களுக்குச் சாதகமான சூழல் தேவை என உணரும்போது, மக்களை மயக்கும் விதத்தில் பேசிவிட்டு, பின் தன்வழியே செல்லும் ஒருசிலரையும் பார்த்து வருகிறோம். இந்தப் பேச்சுகள், காரியத்திற்கு காலைப் பிடிக்கும் கூட்டத்தினருக்கு ஒருவேளை சரிபட்டு வரலாம். ஆனால், நாகரீகமான, பண்பாடான ஒருவருக்கு இது ஒத்து வராது. எதை, எங்கு, எப்படிப் பேச வேண்டும் என்ற பேச்சு பண்பாடு தெரிந்தவர்களும் உள்ளனர். இத்தகைய நபர்களின் வாயிலிருந்து வார்த்தைகள் அளந்து வரும். வாயுள்ள ஜீவன் பிழைத்துக் கொள்ளும் எனச் சொல்கிறோம். அதேநேரம், பேச வேண்டிய நேரத்தில் பேசா மடந்தையாக இருக்கும் தன்னலவாதிகளும் உண்டு. இந்நிலை கடமை தவறுவதாகும். புத்தர் ஒருமுறை சொன்னார் – நீ தனியாக இருக்கும்போது உன் சிந்தனைகளைக் கட்டுப்படுத்து, நீ பொதுவில் இருக்கும்போது உன் வார்த்தைகளை அளந்து பேசு என்று.

முதலாளி ஒருவர், தன் பணியாளரின் அறிவைச் சோதிக்க விரும்பினார். எனவே அவரிடம், அன்று மதிய உணவுக்கு, உலகிலேயே மென்மையான இறைச்சியை சமைத்து வைக்கும்படி கட்டளையிட்டார் முதலாளி. பணியாளரும் முதலாளி சொன்னபடியே, சந்தையிலிருந்து நாவு இறைச்சியை வாங்கி வந்து சமைத்து வைத்தார். முதலாளி சாப்பிடுவதற்குமுன், ஏம்ப்பா, நான் கேட்ட இறைச்சிதானே என்று கேட்டார். ஆமாம் ஐயா, இது நாவு, இதில் சிறிதுகூட எலும்பு கிடையாது. முழுவதும் சதைதான். எனவே இதுதான் உலகிலேயே மென்மையான இறைச்சி என்றார் பணியாளர். அன்று முதலாளி புன்னகையுடன் சாப்பிட்டுவிட்டுச் சென்றார். மறுநாள் முதலாளி பணியாளரிடம், நேற்று, உலகிலேயே மென்மையான இறைச்சியை சமைத்து வைத்தாய், இன்று, உலகிலேயே கடினமான இறைச்சியை சமைத்துக்கொடு என்றார். அன்றும், பணியாளர் சந்தைக்குச் சென்று இறைச்சி வாங்கி வந்து சமைத்து வைத்தார். முதலாளியும்,  உலகிலேயே கடினமான இறைச்சிதானே என்று கேட்டுவிட்டு சாப்பிடத் தொடங்கினார். ஆமாம் ஐயா, இன்றும் நாவுதான் சமைத்திருக்கிறேன். இதுதான், உலகிலேயே கடினமான இறைச்சி என்றார் பணியாளர். முதலாளி குழம்பிப் போனார். அப்போது பணியாளர் சொன்னார்...

ஐயா, நாவு மென்மையானதுதான். இது நல்ல விடயங்களைப் பேசி எத்தனையோ மக்களின் மனங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. நொறுங்கிப்போன எத்தனையோ உள்ளங்கள் இந்த நாவினால், புத்துயிர் பெற்றிருக்கின்றன. நாவு மென்மையாகப் பேசுவதால், தோல்வியில் துவண்டிருந்த எத்தனையோ பேர் வெற்றிக்கனியைப் பறித்திருக்கின்றனர். ஐயா, உங்க ஊக்க வார்த்தைதான் என்னை இந்நிலைக்கு உயர்த்தியிருக்கிறது என்று எத்தனையோ பேர் சொல்கின்றனர்.

இவ்வாறு, நாவினால் ஏற்படும் நன்மைகளை பணியாளர் அடுக்கிக்கொண்டே சென்றார். அப்போது முதலாளி பணியாளரை இடைமறித்து, அதெல்லாம் சரிதாம்ப்பா, நாவு கடினமானது எனறும் சொல்கிறாயே, அது ஏன்? எனக் கேட்டார். அதையும் சொல்கிறேன் முதலாளி எனத் தொடர்ந்தார் பணியாளர்.

ஐயா, நாவு ஒரு கொடிய மிருகம். இதனால்தான் கடவுள் அதை, பற்கள் என்ற கற்கோட்டைக்குள் சிறை வைத்திருக்கிறார். ஒரு நாவினால் நொறுக்கப்பட்ட அரசுகள் ஏராளம். நாவினால் எத்தனை நாடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இல்லாதது பொல்லாதது பேசி எத்தனை பேரின் வாழ்வை இது சீரழித்திருக்கின்றது. இப்போது சொல்லுங்கள் முதலாளி, நாவைவிட கடினமான பொருள் உண்டா இந்த உலகத்தில்? எனக் கேட்டார் பணியாளர். அன்பர்களே, நாவு ஆக்கவும் உதவும், அழிக்கவும் உதவும். அடக்கமின்றி அது இயங்கும்போது, வாழ்வைச் சுட்டெரித்துவிடும். அதனால் நாவைக் காக்க வேண்டும், நாவடக்கம் அவசியம் என, வள்ளுவரும் சொன்னார். நாவடக்கமின்றி முழங்கியவர்கள், வாக்குகளை இழப்பதையும், பலரால் கிண்டலுக்கு ஆளாவதையும் பார்க்கிறோம். ஏன், சிலர் சிறைக்கம்பிகளைக்கூட எண்ணுகிறார்கள். அதேநேரம், நல்வழியில் பயன்படுத்தப்படும் நாவு, தானும் உயர்ந்து, பிறரும் வாழ வழிவகுக்கின்றது. அதனாலே, நல்வழிகாட்டும் பல பெரியோரின் அறிவுரைகளையும், பொன்மொழிகளையும் நாம் போற்றிப் பாதுகாக்கின்றோம்.

அந்த ஊரின் கோவில் மண்டபத்தில் ஒரு துறவி தினமும் உரையாற்றி வந்தார். பலரும் அதைக் கேட்கச் செல்வதைப் பாரத்த அந்த ஊர் திருடன் ஒருவன், அன்று மதியம் தனியாக துறவியிடம் சென்று, சுவாமி எனக்கு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டான். உடனே துறவி, நீ யார் எனக் கேட்டார். சுவாமி, பத்து வயது முதல், கடந்த முப்பது ஆண்டுகளாகத் திருட்டுத் தொழில் செய்து, என் குடும்பத்தைக் காப்பாற்றி வருபவன் நான். இதைத் தவிர எனக்கு வேறு தொழில் தெரியாது எனச் சொன்னான். சரி, நீ உண்மை பேசுவதால், உன் உள்ளத்தில் ஏதோ நல்ல கூறுகள் இருப்பதை உணர்கிறேன். இன்று எல்லாருக்கும் சொல்லித்தரும் முதல் மந்திரத்தை உனக்கும் போதிக்கிறேன், அது சில அற்புதங்களைச் செய்யும் என்றார். உண்மையே பேசு இதுதான் முதல் மந்திரம் என்றார் துறவி. சுவாமி, என் கைகள்தானே திருட்டுத்தொழில் செய்கின்றன, வாய் உண்மையைப் பேசுவது ஒன்றும் கடினம் இல்லை எனச், சொல்லிச் சென்றான் திருடன்.

அன்று இரவு நெருங்கியதும், கன்னக்கோல், நூலேணி, சுத்தியல், கடப்பாறை, அளவுபார்க்கும் நூல் என, தனது தொழிலுக்குத் தேவையான சாமான்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் திருடன். துறவியின் ஆசீர் இருப்பதால், அன்று, பெரிய இடத்தில் கைவைத்து பெரிய சாதனை புரிய விரும்பினான் திருடன். அதனால் அரண்மனைக்குச் சென்றான். நள்ளிரவுக்குப் பின், அரசரும் கையில் விளக்குடன் மதில் சுவரைச் சுற்றி வந்தார். திருடனைப் பார்த்ததும், யார் அங்கே நில் என அரசர் அதட்டினார். உடனே திருடன், ஐயா நான் பக்காத்திருடன் என்றான். அரசரும், நானும் திருடன்தான், வேறு ஊரிலிருந்து வந்திருக்கிறேன், எனக்கும் பணம் வேண்டும், உன்னுடன் வரட்டுமா, திருடியதில் எனக்குப் பாதி தந்தால் போதும் என்றார். சரி என திருடன் சொன்னவுடன், அரசர் அவனை நேரே, அரச கருவூலத்திற்கு அழைத்துச் சென்றார். இருவரும் பெட்டியைத் திறந்தனர். அதில் மூன்று விலையுயர்ந்த பெரிய மாணிக்கக் கற்கள் இருந்தன. ஆளுக்கொன்றை எடுத்துக்கொண்டனர். பின்னர் திருடன், மூன்றாவது கல்லை எடுக்க வேண்டாம், ஒரு கல்லையாவது விட்டுவைத்தார்களே என அரசர் மகிழ்வார் எனச் சொன்னதும், அரசரும் அதை எடுக்கவில்லை. மறுநாள் அரசர் அமைச்சரைக் கூப்பிட்டு, நம் அரச கருவூலத்தில் திருட்டு நடந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன் என்றார். உடனே  நிதியமைச்சர் கருவூலம் சென்று பார்த்தார். அதில் ஒரு மாணிக்கக்கல் இருப்பதைப் பார்த்து பேராசை கொண்டு அதைத் தன் மடியில் மறைத்துக்கொண்டு, அரசரிடம் சென்றார். அரசே, கருவூலத்தில் ஒரு பெட்டியை உடைத்து மாணிக்கக் கற்களைத் திருடிச் சென்றுள்ளனர் என்றார். திருடனின் வீட்டையும் உளவு பார்த்திருந்த அரசர், காவலர்களை அழைத்து, அந்தத் திருடனை உடனே அழைத்து வருமாறு சொன்னார். அவனும் வந்து, ஒரு கல்லை விட்டு வைத்த விபரம் சொன்னான். தான் திருடிய அந்தக் கல்லையும் அரசவையில் காட்டினான். அப்போது அரசர் திருடனிடம், நான்தான் உன்னோடு திருட வந்தவன், இதோ நான் திருடிய கல் என்று எல்லார் முன்னிலையிலும் காட்டினார். பின்னர் அரசர் நிதியமைச்சரிடம், மூன்றாவது கல்லை வையுங்கள் என்றார். என்ன அரசே என்மீது சந்தேகமா எனச் சொல்லி, முதலில் மழுப்பினார் அமைச்சர். அரசர் மிரட்டிய பின்னர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார் அமைச்சர். இறுதியில் உண்மையைப் பேசிய திருடனுக்கு நிதியமைச்சர் பதவி கிடைத்தது. பொய்சொன்ன நிதியமைச்சர் சிறைக்குச் சென்றார். திருடன் நாவு, உண்மையைப் பேசியதன் பயன், அவனுக்கு அரசவையில் பதவி.

ஒருவருடைய பேச்சில், உண்மை, அன்பு, நன்மை, நிதானம், இனிமை. ஆழம், நேரமறிதல், சபையறிதல் ஆகிய எட்டுப் பண்புகளும் இருக்க வேண்டும். இவற்றை இன்னும் விரிவாகச் சொன்னால், உண்மையே பேசு, நன்மையை பேசு, அன்பாகப் பேசு, நிதானமாகப் பேசு, இனிமையாகப் பேசு, கருத்தாழமிக்கதாகச் சிந்தித்துப் பேசு, நேரம் அறிந்து பேசு, சபையறிந்து பேசு என, தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் சொன்னார். அன்பர்களே, உண்மையைப் பேசினால் மட்டும் போதாது, அதில் நன்மையும் கலந்திருக்க வேண்டும்.

ஒரு முரட்டு கொலைகாரனுக்குப் பயந்து ஒருவர் ஒரு வீட்டில் வந்து ஒளிந்திருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அந்த கொலைகாரர் கையில் அரிவாளோடு வந்து உங்கவீட்லதான் அவன் ஒளிஞ்சிருக்கானாம் எனக் கேட்டால், ஆமாம், அவரு அடுப்படியில்தான் மறைந்திருக்கிறார், போய் பிடித்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால், அந்நேரத்தில் ஒளிந்திருப்பவர் பற்றி உண்மையைப் பேசுவதால் நன்மை பயக்காது. எனவே, நாவை நன்மைக்குப் பயன்படுத்துவோம். உண்மையையே எப்போதும் பேசுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.