2017-05-23 15:37:00

உலகப்போக்குகளை கண்டிப்போர் சித்ரவதைகளுக்கு உள்ளாவார்கள்


மே,23,2017. உலகப்போக்குகளைக் கண்டித்ததற்காக எண்ணற்ற துறவியரும் அருள்பணியாளர்களும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர், ஏனெனில் துணிச்சலற்ற, அதேவேளை, சுகம் தேடும் நிறுவனமாக திருஅவை இருக்க வேண்டும் என தீயோன் விரும்புகின்றான் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகப்போக்குகளைக் கண்டிப்போர் சித்ரவதைகளுக்கு உள்ளாவார்கள் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்கு எடுத்துக்காட்டாக, சான் சால்வதோர் பேராயர் அருளாளர் ஆஸ்கர் ரொமேரோவின் வாழ்வைக் குறிப்பிட்டார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, வாழ்வுமுறைகளை மாற்றி, மகிழ்ச்சியுடன் நற்செய்தியை பறைசாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தவறுகளைக் கண்டவிடத்து அமைதி காப்பவர்கள் தப்பி விடுவதையும், கண்டனக் குரல் எழுப்புபவர்கள் தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதையும், மீட்பு வரலாற்றில் பார்க்கிறோம் எனவும் கூறினார் திருத்தந்தை.

ஏழைகளின் சார்பாக உண்மையை ஓங்கி உரைத்ததால் அருளாளர் ரொமேரோ கொலை செய்யப்பட்டதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல நாடுகளில் இத்தகைய நிகழ்வுகள் பல்வேறு காலக்கட்டங்களில் இடம்பெற்றுள்ளன எனவும் கூறினார்.

ஊதியம் ஈட்டுவதில் அக்கறை காட்டும் ஒரு மதத்தைவிட்டு விலகி, மகிழ்ச்சியுடன் நற்செய்தியை போதிக்கும் மதமாக, திருஅவை உருவெடுக்கவேண்டும் என்றார் திருத்தந்தை.

மறைசாட்சிகள் இல்லையென்றாலோ, துணிச்சலற்றதென்றாலோ, கடவுளின் நற்செய்தியை பறைசாற்ற பயந்தாலோ, அது, இயேசுவின் திருஅவையாக இருக்க முடியாது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதர் பணிகள் நூலின் பிரிவு 16ன் நிகழ்வுகளை மையமாக வைத்து மறையுரை வழங்கினார்.

சான் சால்வதோரில் 1980ம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், அருளாளராக உயர்த்தப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவாக, இத்திருப்பலியை நிறைவேற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.