2017-05-23 15:50:00

திருத்தந்தை - வருங்கால அமைதிக்கு, கலந்துரையாடலே வழி


மே,23,2017. “வருங்காலத்தை பொதுவில் திட்டமிடுவதற்கு, கலந்துரையாடல் நமக்கு உதவுகிறது; கலந்துரையாடல் வழியாக, அனைவரின் நலனில் அக்கறை கொண்ட ஓர் அமைதியை, நாம் கட்டியெழுப்புகிறோம்” என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியில், இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில், இத்திங்கள் இரவு இடம்பெற்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த அறிவற்ற வன்முறைச் செயலில், காயமடைந்தவர்களுக்கும், ஏனையோருக்கும் அவசரகால உதவிகளை ஆற்றிவருகின்றவர்களுக்கு, தனது செபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

திருத்தந்தையின் இந்தத் தந்திச் செய்தியை, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

இன்னும், மே 24, இப்புதன் காலை 8.30 மணிக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு ட்ரம்ப் அவர்கள், திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்திக்கிறார்.

திருத்தந்தையைச் சந்தித்த பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் செயலகத்தின் தலைவர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகியோரையும், ட்ரம்ப் அவர்கள் சந்தித்துப் பேசுவார். இச்சந்திப்புக்களின் இறுதியில், ட்ரம்ப் அவர்கள், வத்திக்கானின் சிஸ்டீன் சிற்றாலயம் மற்றும், தூய பேதுரு பசிலிக்கா பேராலயம் செல்வார் என, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

மேலும், இப்புபுதன் முற்பகல் 11.15 மணியளவில், திருமதி ட்ரம்ப் அவர்கள், உரோம் குழந்தை இயேசு சிறார் மருத்துவமனையைப் பார்வையிடுவார் எனவும், திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.