2017-05-23 16:15:00

மான்செஸ்டர் தாக்குதலுக்கு இந்தியத் திருஅவை கண்டனம்


மே,23,2017. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இடம்பெற்ற தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமுற்றவர்கள் குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவிக்கும் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர், இந்திய தலத்திருஅவை மற்றும் அரசு அதிகாரிகள். 

இத்தாக்குதல் குறித்து வருத்தத்தை வெளியிட்ட, மும்பை பேராயரும், ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவருமான கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், இளையோர், குழந்தைகள் என எண்ணற்றோரின் உயிர்களைப் பலிவாங்கியுள்ள இந்த தாக்குதல் குறித்து ஆசியத் திருஅவை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்காகச் செபிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், குறைந்தது 22 பேரின் உயிரிழப்புக்கும், ஏறத்தாழ 59 பேர் படுகாயமடைதலுக்கும் காரணமான இந்த தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்டுள்ள, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இந்த தாக்குதல் குறித்து, தன் வன்மையான கண்டனத்தை வெளியிடுவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தோருடன் ஒருமைப்பாட்டை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இடம்பெற்ற இத்தாக்குதல் குறித்து சீன அரசுத்தலைவர் Xi Jinping, இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி உட்பட எண்ணற்ற உலகத் தலைவர்கள் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம் :  Asia News/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.