2017-05-23 16:25:00

வாழ்வை அழித்து கிட்டும் தீர்வு ஏற்புடையதல்ல‌


மே,23,2017. பொலிவியா  நாட்டில் கருக்கலைப்பு சட்டத்திற்கு கிடைத்துள்ள இசைவு என்பது, பொலிவிய சமூகத்திற்கு கிடைத்துள்ள பெரும் தோல்வி மட்டுமல்ல, இது மரண கலாச்சாரத்தை நோக்கிய ஒரு படி என கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

ஏழ்மை, கல்வி கற்றல், கருவில் குறைபாடு, பாலியல் வன்செயல், சிறு வயதில் கர்ப்பம் தரித்தல் போன்ற காரணங்களை முன்னிறுத்தி, கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க, பொலிவிய அரசியலமைப்பு விவகார அவை பரிந்துரைத்துள்ளது குறித்து கவலையை வெளியிட்டுள்ள ஆயர்கள், அரசியலமைப்பு விவகார அவையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டம், பொது மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொள்ளவில்லை எனக் கூறியுள்ளனர்.

வாழ்வையும் அதன் மாண்பையும் மதித்து பாதுகாப்பதன் வழியாக, பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விடுத்து, வாழ்வை அழிப்பதன் வழியாக, தீர்வை நாடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல எனவும் கூறியுள்ளனர் ஆயர்கள்.  

வாழ்வைக் கருவிலே அழிப்பதே ஒரே தீர்வு எனக் கூறும் பொலிவிய அரசு நிர்வாகம், இதன் வழியாக வருங்காலத் தலைமுறையினருக்கு என்ன சொல்ல விரும்புகிறது என்ற கேள்வியையும் எழுப்பியுள்ள ஆயர்கள், அரசின் முயற்சிகள் ஒருபுறம் இருந்தாலும், அனைத்து மக்களும் தங்கள் மனச்சான்றின்படி செயல்பட உறுதிபூண வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.