2017-05-24 16:57:00

ஆந்திராவில் சேதமடைந்த ஆலயம், அமைதி செப வழிபாடு


மே,24,2017. திருத்தூதர்கள் பணிகள் நூலில் கூறப்பட்டுள்ளவாறு, அரசியல் மற்றும் மத நோக்கங்களுக்காக அன்று கிறிஸ்தவர்கள் வதைக்கப்பட்டதுபோலவே இன்றும் வதைக்கப்படுகின்றனர் என்று, இந்தியாவின் ஹைதராபாத் உயர் மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளர் Bernard Swarna அவர்கள் கூறினார்.

ஹைதராபாத் உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த Godamakunta என்ற இடத்தில், பாத்திமா அன்னை ஆலயம் ஒன்று அடிப்படைவாத குழுவினரால் தாக்கப்பட்டது தொடர்பாக, ஆசிய செய்திக்குப் பேட்டியளித்த  அருள்பணியாளர் Bernard Swarna அவர்கள், இவ்வாறு கூறினார்.

இத்தாக்குதலால், மக்கள் மனம் தளர்ந்து போயிருந்தாலும், இதற்குப் பரிகாரமாக, மே 28, வருகிற ஞாயிறன்று, அப்பகுதியில் ஒரு பல்சமய செப வழிபாடு நிகழும் என்றும், இவ்வழிபாட்டில் அமைதிக்காக அனைத்து மதத்தினரும் கூடிவந்து செபிப்பர் என்றும் அருள்பணி Swarna அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவர்கள் மட்டுமே இந்த வழிபாட்டு முயற்சியில் கலந்துகொள்ள முதலில் திட்டமிடப்பட்டது என்றும், ஏனைய, இந்துக்கள், இஸ்லாமியர் அனைவரும் இதில் கலந்துகொள்ளும் ஆர்வம் தெரிவித்ததால், இதனை பல்சமய வழிபாடாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.