2017-05-24 17:00:00

குற்றங்களைத் தடுப்பதற்கு, சட்டங்கள் மட்டும் போதாது


மே,24,2017. குற்றங்களைத் தடுப்பதற்கு, வெறும் சட்டங்களைக் கொண்டு மட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது போதாது என்பதையும், சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் முன்னேற்றுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் திருப்பீடம் முழுமையாக நம்புகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

வியென்னா நகரில் நிகழும் ஐ.நா.அவை கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும், அருள்பணி Janusz Urbancyzk அவர்கள், மே 22ம் தேதி முதல், 28ம் தேதி முடிய அங்கு நிகழும் பன்னாட்டு கூட்டம் ஒன்றில் இவ்வாறு உரையாற்றினார்.

"குற்றங்களைத் தடுப்பதற்கு முழுமையான, ஒருங்கிணைந்த திட்டங்கள்" என்ற தலைப்பில் நிகழும் இக்கருத்தரங்கை திருப்பீடம் மனதார வரவேற்கிறது என்பதையும், அருள்பணி Urbancyzk அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார்.

குற்றங்களைத் தடுக்கும் முயற்சிகள், மனித சமுதாயத்தின் அடிப்படையான குடும்பங்களில் துவங்கவேண்டும் என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய அருள்பணி Urbancyzk அவர்கள், குடும்பங்கள், பல்வேறு நெருக்கடிகளால் சூழப்படும் வேளையில், அங்கு, அமைதி குலைந்து, அதுவே பல்வேறு குற்றங்களுக்கு காரணமாக அமைகிறது என்று கூறினார்.

குடும்பத்திற்கு அடுத்ததாக பள்ளிகள், மத நிறுவனங்கள் ஆகியவை, இளையோரை நல்வழி நடத்துவதிலிருந்து தவறும்போது, குற்றங்கள் பெருக வாய்ப்புக்கள் உருவாகின்றன என்று, அருள்பணி Urbancyzk அவர்கள், கவலை வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.