2017-05-24 16:09:00

திருத்தந்தை: சீன கத்தோலிக்கர்களுடன் இணைந்து செபிப்போம்


மே,24,2017. "நமக்கு வரும் சவால்களை பொறுமையோடு எதிர்கொள்ளவும், அன்புடன் அவற்றை வெல்லவும் வரம் வேண்டி, மரியாவிடம் நம்மையே ஒப்புக்கொடுப்போம். சீனாவில் உள்ள கத்தோலிக்கர்களுடன் இணைந்து செபிப்போம்" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, மே 24, கிறிஸ்தவர்களின் உதவியாகும் மரியா திருநாளன்று வெளியாயின.

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஷேஷான் மரியன்னை திருத்தலத்தில் கொண்டாடப்படும் கிறிஸ்தவர்களின் உதவியாகும் மரியா திருநாளை, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், சீன கத்தோலிக்கர்களுக்காக செபிக்கும் நாளாக, 2007ம் ஆண்டு உருவாக்கினார்.

2008ம் ஆண்டு முதல் சிறப்பிக்கப்பட்டு வரும் இந்த சிறப்பு செப நாளைக்குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 21, கடந்த ஞாயிறு, அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னர் குறிப்பிட்டதோடு, மே 24, இப்புதனன்று தன் டுவிட்டர் செய்தியிலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மே 22, கடந்த திங்களன்று, இலண்டன் மாநகர், மான்செஸ்டரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 23 இச்செவ்வாயன்று வெளியிட்ட 'இன்ஸ்டகிராம்' பதிவில், "வன்முறைக்கு பலியாவோருக்காக செபிப்போமாக" என்ற விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளார்.

மான்செஸ்டரில், மே 22, இத்திங்கள் இரவு நிகழ்ந்த ஓர் இசை நிகழ்ச்சியின் இறுதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், 22 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 59 பேர் காயமுற்றனர் என்று ஊடகங்கள் கூறியுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.