2017-05-24 16:28:00

திருத்தந்தையுடன் அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப்


மே,24,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர், டொனால்டு டிரம்ப், அவரது மனைவி, மெலானியா டிரம்ப் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர், மே 24, இப்புதன் காலை 8.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினர்.

புதன் பொது மறைக்கல்வி உரையை வழங்கச் செல்வதற்கு முன்னதாக, அரசுத்தலைவர் டிரம்ப் அவர்களை திருத்தந்தை சந்தித்த வேளையில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நல்லுறவு குறித்து, இச்சந்திப்பில் பேசப்பட்டதென வத்திக்கான் செய்தித் தொடர்பகம் அறிவித்தது.

திருத்தந்தையுடன் நிகழ்ந்த இச்சந்திப்பிற்குப்பின், அரசுத்தலைவர், டிரம்ப் அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

மேலும், திருப்பீடத்தில் நிகழ்ந்த சந்திப்புக்களுக்குப் பின்னர், அரசுத்தலைவரின் மனைவி, மெலானியா டிரம்ப் அவர்கள், உரோம் நகரின் குழந்தை இயேசு குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்று, அங்குள்ளோரைச் சந்தித்தார் என்று வத்திக்கான் செய்தித் தொடர்பகம் அறிவித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.