2017-05-24 15:23:00

புதன் மறைக்கல்வியுரை : கடவுள் எப்போதும் நம்முடன் நடக்கிறார்


மே,24,2017. இப்புதனன்று திருப்பீடத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவரையும், அவருடன் வந்தவர்களையும், காலை எட்டு மணி, முப்பது நிமிடங்களுக்குச் சந்தித்தபின்,  பல நாடுகளின் திருப்பயணிகளை சந்திக்க, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திற்கு வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்தவ நம்பிக்கை குறித்த தன் தொடர் மறைக்கல்வி உரையில், எம்மாவு வழிப்பயணத்தில் இயேசுவுடன் இடம்பெற்ற நிகழ்வு குறித்து, இந்த உயிர்ப்புக் காலத்தில் உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில் லூக்கா நற்செய்தியின் 24ம் பிரிவிலிருந்து எம்மாவு பயண நிகழ்வு வாசிக்கப்பட்டது.

“அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார். அவர்கள் அவரிடம், “எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?” என்று பேசிக் கொண்டார்கள் (லூக்.24,28-32 )”. இப்பகுதி வாசித்தளிக்கப்பட்டபின், தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

அன்பு சகோதர சகோதரிகளே! கிறிஸ்தவ எதிர்நோக்கு குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, எம்மாவு பயணத்தின்போது இரு சீடர்களை உயிர்த்த இயேசு சந்தித்த நிகழ்வு குறித்து நோக்குவோம். சீடர்களால் அடையாளம் கண்டுகொள்ளாதபடிக்கு, அவர்களுடன் நடந்து சென்ற இயேசு, சிலுவையில் இடம்பெற்ற பெருந்துயரால் எவ்விதம் தங்கள் நம்பிக்கைகள் சிதறிப் போயின என்பது குறித்து அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்டுக்கொண்டே அவர்களுடன் நடந்து சென்றார். இயேசுவும் மெதுவாக, அவர்களுடன் பேச்சுக்கொடுத்து, மெசியாவின் துன்பங்கள் மற்றும் மரணம் குறித்து மறைநூல்களில் கூறியிருப்பவைகள் எவ்வாறு நிறைவேறியுள்ளன என்பதை விளக்கி, ஒரு புதிய மற்றும் உயரிய எதிர்நோக்கிற்கு அவர்களின் இதயங்களைத் திறந்தார். பின்னர், இயேசு அப்பத்தை பிட்டபோதுதான், தங்களுடன் இருப்பவர் ஆண்டவர் இயேசு என்பதை சீடர்கள் புரிந்துகொண்டனர். இதன் பின்னர் இயேசு அங்கிருந்து மறைந்து விடுகிறார், அச்சீடர்களும் இந்த நற்செய்தியுடன் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றனர். இந்த எம்மாவு பயண நிகழ்வில் நாம், இயேசுவின் 'எதிர்நோக்கு பயிற்சிமுறையை' காண்கிறோம். அதாவது, பொறுமையாக உடன்சென்று, இறைவனின் வாக்குறுதிகள் மீதான நம்பிக்கையை படிப்படியாகத் திறப்பதை அடிப்படையாகக் கொண்டது இந்த பயிற்சிமுறை. இந்த நிகழ்வு, திருப்பலியின் முக்கியத்துவத்தை படம்பிடித்துக் காட்டுகிறது. திருப்பலியில் அப்பத்தை பகிர்வதுபோல், நம் வாழ்வையும் பிட்டு, பகிர்ந்து மற்றவர்களுக்கு வழங்குகிறார் இயேசு. நம் வாழ்வுப் பயணத்தின் ஒவ்வோர் அடியிலும், நம்மைத் தொடர்ந்துவரும் இறைவனின் மாறாத அன்பை அடிப்படையாகக்கொண்ட எதிர்நோக்கு மற்றும் வாழ்வின் வார்த்தைகளை மற்றவர்களுக்கு வழங்கும் நோக்கில், அவர்களை எதிர்கொண்டு சென்று, அவர்களின் இன்பங்களுக்கும் துன்பங்களுக்கும் செவிமடுக்க வேண்டும் என இயேசுவின் சீடர்களைப்போல் நாமும் அனுப்பப்பட்டுள்ளோம்.

இவ்வாறு தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியா, வியட்நாம், பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, சிம்பாபுவே உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த அனைத்துத் திருப்பயணிகளுக்கும், உயிர்த்த கிறிஸ்துவின் மகிழ்வில், அருளை வேண்டுவதாக உரைத்து, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.