2017-05-24 16:20:00

மே 24 - சீன திருஅவைக்காக செபிக்கும் உலக நாள்


மே,24,2017. சீனாவில் உள்ள திருஅவையுடன், உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் இணைந்து செபிக்கும் ஓர் உலக நாளாக, மே 24ம் தேதி, எதிர்காலத்தில் மாறவேண்டும் என்ற செய்தியை, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2007ம் ஆண்டு, மே 27ம் தேதி கொண்டாடப்பட்ட தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவன்று வெளியிட்டார்.

சீனாவில் உள்ள ஆயர்கள், அருள்பணியாளர்கள், அர்ப்பண வாழ்வை மேற்கொண்டோர் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்காகவும் திருத்தந்தை எழுதியிருந்த சிறப்பு மடலில், தன் விருப்பத்தை இவ்வாறு வெளியிட்டிருந்தார்.

ஷாங்காய் நகரில் அமைந்துள்ள ஷேஷான் மரியன்னை திருத்தலத்தில், கிறிஸ்தவர்களின் உதவியாகும் மரியா திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படும் வேளையில், சீனாவில் வாழும் கத்தோலிக்கர்களும், உலகின் பல நாடுகளில் வாழும் சீன கத்தோலிக்கர்களும், உலக கத்தோலிக்கர்களும், சீன தலத்திருஅவைக்காகச் செபிப்பதில் இணைந்து வரவேண்டும் என்று முன்னாள் திருத்தந்தை அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை விடுத்த வேளையில், திருத்தந்தை அவர்கள், ஷேஷான் அன்னையை நோக்கி உருவாக்கியிருந்த ஒரு செபத்தையும் வெளியிட்டார். இந்த மன்றாட்டு, 2008ம் ஆண்டு முதல், மே 24ம் தேதி உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.