2017-05-25 16:25:00

ஆப்ரிக்காவில் பெண்கள், சிறாரின் நிலை குறித்து ஆயர்கள்


மே,25,2017. ஆப்ரிக்காவின் தென்பகுதியில் பெண்களும் சிறார்களும் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்த அண்மை அறிக்கை மிகவும் வேதனை தருவதாக உள்ளதென, தென்மண்டல ஆப்ரிக்க ஆயர் பேரவை, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

குழந்தைகளும் பெண்களும், அவர்களின் உறவினர்களாலும், அவர்களுக்கு மிகவும் பழக்கமானவர்களாலுமே தவறாக நடத்தப்படுகிறார்கள் என்ற செய்தியும் அதிர்ச்சி தருவதாக உள்ளது என உரைத்துள்ளனர் ஆயர்கள்.

தெற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஐந்துக்கு ஒரு சிறார், பாலினவகையில் தவறாக நடத்தப்படுவதாகவும், வீடுகளில் பெண்கள் மீதான வன்முறைகள் சர்வ சாதாரணமாக காணப்படுவதாகவும், உரிமை மீறல்களுக்கு, இளவயது குடிப்பழக்கமும் ஒரு காரணமாக இருப்பதாகவும் அண்மை ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர், ஆப்ரிக்காவின் தென்மண்டல ஆயர்கள்.

நீதித்துறைக்கும், சிறைச்சாலைகளுக்கும் அதிக நிதியை ஒதுக்கும் பழக்கத்திலிருந்து விலகி, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அவற்றைச் செலவிடவேண்டும் எனவும் அரசுகளை விண்ணப்பித்துள்ளனர் ஆயர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.