2017-05-26 15:41:00

அப்பாவி மக்கள், போர் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுவதை...


மே,26,2017. அப்பாவி குடிமக்களை, போர் ஆயுதங்களாகப் பயன்படுத்துவது, மனிதரின் நடத்தையில் காணப்படும் மிகவும் அருவருப்பான செயல் என, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.வில் உரையாற்றினார்.

ஆயுத மோதல்களில், குடிமக்கள் பாதுகாக்கப்படுதல் மற்றும், நலவாழ்வு என்ற தலைப்பில், ஐ.நா. பாதுகாப்பு அவை நடத்திய உரையாடலில், இவ்வியாழனன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார்.

ஆயுத மோதல்கள் இடம்பெறும் இடங்களில், குடிமக்களுக்குப் பாதுகாப்பு குறைவு என்பது மட்டுமல்ல, அவர்கள், மோதல்களில், ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்து வருகின்றது என்று திருப்பீடம் நம்புவதாகத் தெரிவித்தார், பேராயர் அவுசா.

ஆயுத மோதல்களில் பயன்படுத்தப்படும் நவீன ஆயுதங்களும், தொழில்நுட்பமும், அப்பாவி குடிமக்களைக் குறிவைக்கின்றன என்றும், பெரும் அழிவை ஏற்படுத்தாத ஆயுதங்கள் என்ற பெயரில், தற்போது பயன்படுத்தப்படும், நவீனமயமாக்கப்பட்ட ஆயுதங்கள், பெரும் அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை ஒத்ததாய் இருக்கும் நிலையைக் காண முடிகின்றது என்றும், தன் உரையில் குறிப்பிட்டார், பேராயர் அவுசா.

அப்பாவி குடிமக்கள், போர் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுவதைத் தடை செய்வதற்கு,  பன்னாட்டு சமுதாயம் ஆவன செய்யுமாறும் வலியுறுத்தினார், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.