2017-05-26 15:46:00

கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை அறிவிப்பதற்காக உள்ள இடம் உலகம்


மே,26,2017. இயேசு கிறிஸ்துவை அறிவிப்பதற்காக, கிறிஸ்தவர்களின் இடமாக இருப்பது, இந்த உலகம் என்றும், அதேநேரம், இயேசுவோடு ஒன்றிணைவதற்காக, கிறிஸ்தவர்களின் பார்வை, எப்போதும் விண்ணை நோக்கியதாய் இருக்க வேண்டும் என்றும், இவ்வெள்ளி காலை மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கியத் திருத்தந்தை, திருவிவிலியம் கிறிஸ்தவர்களின் பயணத்திற்கு, மூன்று வார்த்தைகளையும், மூன்று இடங்களையும் குறிப்பிடுகின்றது என்று சொல்லி, அவற்றை விளக்கினார்.

முதல் வார்த்தை நினைவு என்றும், உயிர்பெற்றெழுந்த இயேசு தம் சீடர்களை கலிலேயாவுக்குப் போகச் சொன்னார், இங்கு, சீடர்களுக்கு, உயிர்த்த ஆண்டவருடன் முதல் சந்திப்பு நடந்தது என்றும் கூறியத் திருத்தந்தை, நம் ஒவ்வொருவருக்குமே,  உயிர்த்த ஆண்டவர் தம் சீடர்களுக்குத் தோன்றிய கலிலேயா உள்ளது, அங்கு நாம் அவரைச் சந்தித்தால், அவரை ஆர்வமுடன் பின்பற்றும் மகிழ்வு கிடைக்கும் என்றும் கூறினார்.

நல்ல கிறிஸ்தவராக வாழ்வதற்கு, இயேசுவோடு நாம் நடத்திய முதல் சந்திப்பின் நினைவு எப்போதும் நம்மிடம் இருக்க வேண்டும் என உரைத்த திருத்தந்தை, மறைநூல் குறிப்பிடும் இரண்டாவது இடம் விண்ணகம் என்றும், நாம் இவ்வுலகில் இருந்துகொண்டே விண்ணகம் பற்றிய சிந்தனைகளில் வாழ வேண்டும் என்றும் கூறினார்.

மறைநூல் குறிப்பிடும் மூன்றாவது இடம், உலகம் என்றும், இயேசு விண்ணேற்பு அடையும்முன், நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள் என்று தம் சீடர்களிடம் சொன்னார் என்றும் கூறியத் திருத்தந்தை, நாம் இயேசுவை அறிவிக்கும் இடம், இந்த உலகம் என்று உரைத்தார்.

நாம் இயேசுவால் மீட்படைந்துள்ளோம், நமக்கு அருளை வழங்கவும், இறைத்தந்தையிடம் நம் அனைவரையும் அழைத்துச் செல்லவும், அவர் இவ்வுலகுக்கு வந்தார் என்ற, இயேசுவின் திருவார்த்தையை அறிவிப்பதற்கு, கிறிஸ்தவர்களுக்குரிய இடம் இந்த உலகம் என, மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நினைவு, செபம், மறைப்பணி ஆகிய மூன்று வார்த்தைகளும், கலிலேயா, விண்ணகம், உலகம் ஆகிய மூன்று இடங்களுமே கிறிஸ்தவர்களைக் குறித்துக் காட்டும் அடையாளங்கள் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்கள்,  இந்தக் கூறுகளுடன் வாழ்ந்தால், கிறிஸ்தவ வாழ்வு அழகாகவும், மகிழ்வாகவும் அமையும் எனக் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.