2017-05-26 15:47:00

திருத்தந்தை : எல்லைகளற்ற மறைப்பணியாளர்களாகச் செயல்படுங்கள்


மே,26,2017. அனைவருக்கும், சிறப்பாக, ஏழைகளுக்கு, எல்லைகளற்ற மறைப்பணியாளர்களாகச் செயல்படுங்கள் என, பிறரன்பு மறைப்பணியாளர்கள் சிறிய அருள் சகோதரிகள் சபையினரிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையின் 12வது பொதுப்பேரவையில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சபையினர் ஆற்றிவரும் பல்வேறு திருத்தூதுப் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இச்சபை சகோதரிகள், கிறிஸ்துவின் சதையை ஏழைகளில் நினைவுகூர சிறப்பாக அழைப்புப் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இயேசுவாகிய நற்செய்தியின் மகிழ்வையும், கிறிஸ்துவின் இரக்கம்நிறை திருமுகத்தில், கடவுளின் அன்பு வெளிப்படுத்தப்படுவதன் அழகையும், இச்சகோதரிகள் அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஏழைகள், வயது முதிர்ந்தோர், உடலளவிலும், மனத்தளவிலும் பாதிக்கப்பட்ட நோயாளர் என, சமுதாயத்தில் பல்வேறு விதமான மக்களுடன் உடனிருந்து, உரையாடி, அவர்களுக்கு உதவிபுரிவதாக, இச்சகோதரிகளின் மறைப்பணி அமைந்துள்ளது என்றும், இந்த மறைப்பணி தரும் நற்செய்தியின் மகிழ்வு, திருடப்பட்டுவிடாதபடிக்குக் கவனமாக இருக்குமாறும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

திருஅவையில் மறைப்பணி, கிறிஸ்துவைச் சந்திப்பதிலிருந்து பிறந்தது என்றும், ஒரு மறைப்பணியாளருக்குத் துணிவும், படைப்பாற்றல்திறனும் இருக்க வேண்டும், அவர், சுதந்திர மனிதராகவும், தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டவராகவும் இருப்பது அவசியம் என்றும் உரையாற்றிய திருத்தந்தை, ஒரு மறைப்பணியாளர், இரக்கத்தின் இறைவாக்கினராகச் செயல்படுவது முக்கியம் எனவும் கூறினார்.

அருள்பணி ஓரியோனே அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஏனைய நிறுவனங்கள் மற்றும், இயக்கங்களுடன் இணைந்து செயல்பட, இச்சபையினரை ஊக்கப்படுத்திய திருத்தந்தை, இச்சபையினர் ஏழைகளுக்கு ஆற்றிவரும் எடுத்துக்காட்டான பணிகளில் அன்னை மரியா உதவிபுரிவாராக என்றும் கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.