2017-05-26 15:14:00

பாசமுள்ள பார்வையில்...: ஒவ்வொருவருக்கும் ஒரு குரு


ஊரை விட்டு நகருக்குள் வந்து 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. அவ்வப்போது தாயைச் சென்று பார்த்து வருவதோடு, ஊர்ப்பாசம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டது. கடந்த மூன்றாண்டுகளாக அவர் அனுபவிக்காத துன்பங்களே இல்லை என்று சொல்லலாம். தொட்டதெல்லாம் தோல்வியில் முடிந்துகொண்டிருந்தது. சந்நியாசியாகப் போய்விடலாமா என்று கூட எண்ணினார். பக்கத்து மலையில் குடிகொண்டிருந்த சுவாமியாரைச் சந்தித்து, தன் துன்பங்களை எடுத்துக்கூறி, அவற்றை அகற்றும் வழி கேட்டார். ஞானியோ அவரிடம், 'துன்பங்களை தவிர்ப்பது, எதிர்கொள்வது, தாங்குவது, என எல்லாவற்றையும் என் குருவிடமிருந்தே கற்றேன். மனிதர் ஒவ்வொருவருக்கும் ஒரு குரு, கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கிறார். நாம்தான் அந்த குருவை கண்டுகொள்ளவும், அங்கீகரிக்கவும் தவறிவிடுகிறோம். முதலில் உன் குருவை அங்கீகரிக்க முன் வா. என்னுடைய நடைமுறை ஞானமெல்லாம் நான் என் குருவிடமிருந்து கற்றதே. இப்போது, என் குருவை காண விரும்புகிறாயா' என்று கேட்டு, உள்பக்கம் திரும்பி 'அம்மா' என அழைத்தார்.  ஒவ்வொருவருக்கும் அவர்களின் தாய்தான் குரு என அடையாளம் காட்டினார் அந்த ஞானி. ஊரிலிருக்கும் தன் அம்மாவிடம் தன் பிரச்னைகளுக்கு ஆலோசனை கேட்காமல் போனது குறித்து நொந்து கொண்டார், தீர்வு தேடிச் சென்றவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.