2017-05-26 15:15:00

பிணையக் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு கர்தினால் கெவேதொ


மே,26,2017. பிலிப்பீன்ஸ் நாட்டின்   மராவி நகரிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட அருள்பணியாளரையும், கத்தோலிக்கர்களையும் விடுதலை செய்யுமாறு, அந்நாட்டு திருஅவை அதிகாரிகள், இஸ்லாமியப் புரட்சியாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இச்செவ்வாயன்று, மிந்தனாவோ தீவிலுள்ள மராவி நகர் பேராலயத்திற்குள் நுழைந்த இஸ்லாமியப் புரட்சியாளர்கள், அங்கு செபித்துக்கொண்டிருந்த 15 கத்தோலிக்கர்களையும், அப்பேராலயத்திற்கு அருகிலுள்ள ஆயர் இல்லத்திலிருந்த முதன்மைக் குருவையும் கடத்திச் சென்றதுடன், ஆயர் இல்லத்தையும் பேராலயத்தையும் தீயிட்டுக் கொளுத்திச் சென்றுள்ளனர்.

இஸ்லாம் போதிப்பது போன்று, இந்த அப்பாவி மக்களுக்கு எவ்விதத் தீங்கும் செய்யமால், இவர்களைப் பாதுகாப்பாக விடுதலை செய்யுமாறு, கடத்தியவர்களின் மனசாட்சிக்கு விண்ணப்பிப்பதாகக் கூறியுள்ளார், அந்நாட்டு கர்தினால் ஒர்லாந்தோ கெவேதொ.

இப்பிணையக் கைதிகளின் விடுதலைக்காகச் செபித்த கர்தினால் கெவேதொ அவர்கள், அன்பான இறைவன், மராவி மக்களைப் பாதுகாக்குமாறும் செபித்தார்.

இதற்கிடையே, தங்கள் மீதான தாக்குதல்களை இராணுவம் கைவிடவில்லையெனில், தங்களால் கடத்தி வைக்கப்பட்டுள்ள அருள்பணியாளர் Sogaun Dewatering மற்றும், ஏனைய 15 கத்தோலிக்கர்களை, கொலை செய்யவுள்ளதாக, இஸ்லாமியப் புரட்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

ஆதாரம் : CNA/EWTN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.