சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ ஞாயிறு சிந்தனை

ஆண்டவரின் விண்ணேற்றம் - ஞாயிறு சிந்தனை

ஆண்டவரின் விண்ணேற்றம்

27/05/2017 13:57

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவை இஞ்ஞாயிறு நாம் கொண்டாடுகிறோம். இப்பெருவிழாவின் கருப்பொருள், இயேசு, பிரமிக்கத்தக்க முறையில், விண்ணேற்றம் அடையும் நிகழ்வு அல்ல; மாறாக, அவர் தன் சீடர்களுக்கு வழங்கிய இறுதி அன்புக் கட்டளைகள். “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” (மத்தேயு 28:19) என்ற கட்டளையை, மத்தேயு நற்செய்தியும், "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற்கு 16:15) என்ற கட்டளையை, மாற்கு நற்செய்தியும் குறிப்பிட்டுள்ளன.

'சீடராக்குதல்', 'நற்செய்தியைப் பறைசாற்றுதல்' என்ற சொற்களைக் கேட்டதும், இவற்றை ஆற்றவேண்டியவர்கள் அருள்பணியாளர்களும், துறவியரும் என்ற தவறான எண்ணம் எழக்கூடும். இயேசுவிடமிருந்து இந்த இறுதி கட்டளைகளைப் பெற்றவர்களில் யாரும் அருள்பணியாளரோ, துறவியோ இல்லை. அவர்கள் அனைவருமே குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த சாதாரணத் தொழிலாளிகள். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், நாம் அனைவரும் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கு, மக்களைச் சீடராக்குவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணரலாம். நற்செய்தியைப் பறைசாற்றுவதும், சீடர்களை உருவாக்குவதும் உலகெங்கும் நிகழவேண்டிய ஒரு பணி என்றாலும், அதன் ஆரம்பம் அவரவர் வாழும் இடங்களில் துவங்கவேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லித்தருகிறது. ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவின் கருப்பொருள் இதுவே!

'நற்செய்தியைப் பறைசாற்றுதல்' என்ற பணியை, பிரம்மாண்டமாக செய்யவேண்டும் என்ற ஆவலில், அதனை ஒரு கண்காட்சியாக, விளம்பரமாக மாற்றும்போது, அதன் விளைவுகள் பாதகமாக அமையக்கூடும். 1960களில், ஜோ பெய்லி (Joe Bayly) என்பவர், 'The Gospel Blimp', அதாவது, 'நற்செய்தி வானூர்தி' என்ற கதையை, ஓர் உவமையாக வெளியிட்டார். நற்செய்தியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவ குழுவினர், தங்கள் ஊரில், நற்செய்தி, அனைவரையும் அடையவேண்டும் என்ற ஆர்வத்தில், Blimp எனப்படும் வானூர்தி ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். பொதுவாக, பெரும் நிறுவனங்கள் வான் வழி விளம்பரங்களை மேற்கொள்ள, Blimp எனப்படும் வானூர்தியைப் பயன்படுத்தினர். அதே முறையைப் பின்பற்றி, இந்த விவிலிய ஆர்வலர்கள், விவிலிய வாசங்கள் அடங்கிய சிறு, சிறு நூல்களை, சிவப்பு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, Blimp வழியே, ஊரெங்கும் போட்டனர். வானிலிருந்து விழுந்த அந்த பைகள், ஏறத்தாழ குண்டுகள் போல், ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் விழுந்தன. மேலும், அதே வானூர்தி வழியே, நற்செய்தி பாடல்கள் மிக சப்தமாக ஊரெங்கும் ஒலிக்கப்பட்டது. மக்கள் அதைக் கேட்டு தங்கள் காதுகளை மூடிக்கொண்டனர். அதே வேளையில், அந்த சப்தத்தால் பெரிதும் கலவரமடைந்த நாய்கள், ஊரெங்கும் ஊளையிட ஆரம்பித்தன. விவிலிய ஆர்வலர்கள் விரும்பியதற்கு முற்றிலும் எதிராக, மக்கள் அந்த 'விவிலியத் தாக்குதலை' வெறுத்தனர். நேரடியான மனிதத் தொடர்பு இன்றி, கருவிகளைக் கொண்டு பறைசாற்றப்படும் நற்செய்தி, மக்களை, இறைவனிடமிருந்தும், நற்செய்தியிடமிருந்தும் தூரமாக்கும் என்பதை, ஜோ பெய்லி அவர்கள், இந்த உவமை வழியே கூறியுள்ளார்.

நேரடியாக நாம், பகிர்ந்துகொள்ளும் நற்செய்தியும், வாய்வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. வாய் வார்த்தைகளை விட நம் வாழ்வு நற்செய்தியாக மாற வேண்டும் என்பதை, அசிசி நகர் புனித பிரான்சிஸ் சொல்லித் தந்தார்.

ஒரு நாள், புனித பிரான்சிஸ், ஓர் இளம் துறவியை அழைத்து, "வாருங்கள் நாம் ஊருக்குள் சென்று போதித்துவிட்டு வருவோம்" என்று கூறி, உடன் அழைத்துச் சென்றார். போதிப்பதற்கு தன்னை பிரான்சிஸ் அழைத்துச் செல்கிறார் என்று உணர்ந்த அந்த இளையவர் மிகவும் மகிழ்ந்தார். ஊருக்குள் நுழைந்ததும், வயலில் அறுவடை செய்துகொண்டிருந்த பணியாள்களுடன் இறங்கி வேலை செய்தார், பிரான்சிஸ். இதைக் கண்ட அந்த இளம் துறவியும் குனிந்து வேலைகள் செய்தார். ஊருக்குள், ஒரு கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த வயதானப் பெண்மணிக்கு, தண்ணீர் இறைக்க உதவிய பிரான்சிஸ்,. தண்ணீர் நிரம்பிய பாத்திரங்களை, அப்பெண்மணியின் வீடுவரை சுமந்து சென்றார். இவ்வாறு, நாள் முழுவதும், அந்த ஊரில் இருந்த அனைவருடனும் சேர்ந்து பல பணிகள் செய்தார். ஒவ்வொரு முறையும் பிரான்சிஸ் ஓர் இடத்தில் நிற்கும்போது, அந்த இடத்தில் அவர் போதிக்கப் போகிறார் என்று இளையவர் எண்ணினார். ஆனால், ஒரு வார்த்தையும் சொல்லாமல், பிரான்சிஸ் பல உதவிகளைச் செய்தார். அந்த நாள் இறுதியில் பிரான்சிஸ் கோவிலுக்குச் சென்றார். அவர் கட்டாயம் அந்நேரத்தில் போதிப்பார் என்று இளையவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, பிரான்சிஸ் கோவிலில் அமைதியாக செபித்துவிட்டுக் கிளம்பினார்.

இருவரும் மீண்டும் ஊரைவிட்டு வெளியே வந்து, தங்கள் துறவகத்தை நோக்கிச் செல்லும்போது, இளையவர் தன் உள்ளத்தில் நிறைந்திருந்த ஏமாற்றத்தை வெளியிட்டார். "போதிப்பதற்காகத் தானே ஊருக்குள் சென்றோம். இப்போது போதிக்காமலேயே திரும்புகிறோமே!" என்று தன் உள்ளக் குமுறலைக் கூறினார்.  "நாம் தேவையான அளவு இன்று போதித்து விட்டோம். நமது செயல்கள் வார்த்தைகளை விட வலிவானவை. தேவைப்படும்போது மட்டும் வார்த்தைகளை நாம் பயன்படுத்தவேண்டும்" என்று அந்த இளையவருக்கு பிரான்சிஸ் கூறினார்.

வாய் வார்த்தைகளால் மேடைகளில் பறைசாற்றப்படும் நற்செய்தியைக் காட்டிலும், வாழ்க்கையால் உணர்த்தப்படும் நற்செய்திகள் இன்னும் ஆழமான தாக்கங்களை உருவாக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இயேசுவும் அவர் வழங்கிய நற்செய்தியும் மையங்கள் என்பதை மறந்துவிட்டு, நற்செய்தியைப் போதிப்பவரின் புகழ், அவரது பேச்சுத் திறன் இவற்றை மையங்கள் என்று நாம் நம்பியபோதெல்லாம் பிரச்சனைகள் எழுந்துள்ளன என்பதை கிறிஸ்தவ வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்லித்தருகிறது. இருபது நூற்றாண்டுகளைத் தாண்டி நற்செய்தி இன்றும் இவ்வுலகில் அர்த்தம் உள்ளதாக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், தங்கள் அறிவுத்திறன் கொண்டு, வார்த்தைப் புலமை கொண்டு, நற்செய்தியைப் போதித்தவர்கள் அல்ல, மாறாக, வார்த்தைகளை அதிகம் கூறாமல், நற்செய்தியை வாழ்ந்து காட்டிய அசிசி நகர் புனித பிரான்சிஸ், போன்ற பல்லாயிரம் உன்னதப் பணியாளர்களே! நற்செய்தியை வாழ்வாக்கி, இன்றும் நம்மிடையே அதை வாழவைப்போரை எண்ணி, இறைவனுக்கு நன்றி சொல்வோம். விண்ணேற்றம் அடைவதற்குமுன், இயேசு, “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” என்று, சீடருக்கும் நமக்கும் தந்த அன்புக் கட்டளை, நமது எடுத்துக்காட்டான வாழ்வின் வழியே நிறைவேறும் என்பதை நம்புவோம். செயல்படுத்துவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

27/05/2017 13:57