2017-05-27 14:39:00

ஜெனோவா காஸ்லினி சிறார் மருத்துவமனையில் திருத்தந்தை


மே,27,2017. விசுவாசம், பிறரன்பு வழியாகவே செயல்படுகின்றது, விசுவாசம் இல்லாத பிறரன்பு செத்ததே என்பதால், நலவாழ்வுப் பணியாளர்கள், நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ள நல்ல சமாரியரை அடிக்கடி நினைவில் இருத்தி, பிறரன்பால் உந்தப்பட்டு பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜெனோவா நகரிலுள்ள “ஜெரோலாமோ காஸ்லினி (Gerolamo Gaslini)” சிறார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறார் மற்றும், அங்கு பணியாற்றுவோரை,  இச்சனிக்கிழமை மாலை 3.15 மணியளவில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, நோயுற்ற சிறாரில் ஆண்டவரைப் பார்த்து, அவர்களின் தேவைகளை, கனிவன்புடன் நிறைவேற்றுமாறு பரிந்துரைத்தார்.

இத்தாலிய அமைச்சர் ஜெரோலாமோ காஸ்லினி அவர்களால் உருவாக்கப்பட்ட இச்சிறார் மருத்துவமனையின் வரலாற்றையும், இம்மருத்துவமனை, கடந்த எண்பது ஆண்டுகளாக, இத்தாலி மற்றும், உலகெங்கும் பாராட்டப்பட்டு வருவதையும் குறிப்பிட்டுப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் சிறுவயது மகளை இழந்த ஜெரோலாமோ காஸ்லினி அவர்கள், தனது நிறுவனங்கள், தான் உருவாக்கிய அமைப்புகள், கட்டடங்கள், சேமித்து வைத்திருந்த பணம், தனது வீடு என, தனது உடைமைகள் அனைத்தையும் வழங்கி, இச்சிறார் மருத்துவமனையை ஆரம்பித்தார் என்றும் திருத்தந்தை கூறினார்.

இச்சிறார் மருத்துவமனை, கத்தோலிக்க விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு, அதனால் வழிநடத்தப்பட வேண்டும், இம்மருத்துவமனையின் ஒவ்வொரு நடவடிக்கையும், இங்கு வேதனைப்படுபவருக்கு ஆறுதலாக அமைய வேண்டும்  என, காஸ்லினி அவர்கள், தனது உயிலில் எழுதி வைத்துள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மருத்துவமனை பணியாளர்கள், தங்கள் மறைப்பணிக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்றும், இங்கு நடைபெறும் மருத்துவ ஆய்வுகள், எல்லா நிலைகளிலும் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து உதவும் என்றும், தான் நம்புவதாகவும், அதற்காகத் தான் செபிப்பதாகவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சந்திப்பிற்குப்பின், ஜெனோவா கென்னடி வளாகத்திற்குச் சென்று திருப்பலி நிறைவேற்றுவது, திருத்தந்தையின் இந்த ஒருநாள் மேய்ப்புப்பணி பயணத்தின் இறுதி நிகழ்வாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.