2017-05-29 16:14:00

எகிப்தின் புதிய மறைசாட்சிகளுக்காக செபிப்போம்


மே,29,2017. கடந்த வாரத்தில் எகிப்தில் தங்கள் விசுவாசத்திற்காக கொல்லப்பட்ட கிறிஸ்தவர்கள் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபங்களை இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனிக்கிழமையன்று இத்தாலியின் ஜெனோவா நகரில் இடம்பெற்ற மேய்ப்புப்பணி சார்ந்த பயணத்தின்போதும், எகிப்து படுகொலைகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் திருத்தந்தை தவாத்ரோஸ் அவர்களுக்கும், எகிப்து நாடு முழுவதற்கும் தன் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.

எகிப்து கிறிஸ்தவர்கள் பேருந்தில், நாட்டிற்குள் திருப்பயணத்தை மேற்கொண்டபோது, வழியில் நிறுத்திய இஸ்லாமிய தீவிரவாதிகள், கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை மறுதலிக்கவேண்டும் என கட்டாயப்படுத்தியபோது மறுத்ததால், குழந்தைகள் உட்பட 35 பேரை சுட்டுக் கொன்றுள்ளது பற்றி ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இந்த புதிய மறைசாட்சிகளை தன் இல்லத்திற்குள் வரவேற்கும் இறைவன், பயங்கரவாதிகளின் மனம் மாறவும் உதவுவாராக எனவும் தெரிவித்தார்.

மேலும்,  மான்செஸ்டர் நகரில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் குறித்து கவலையையும் அனுதாபங்களையும், இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தோலி உரையின்போது குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்கான செபத்திற்கும் உறுதி கூறினார்.

மேலும், இஞ்ஞாயிறு சிறப்பிக்கப்பட்ட 'உலக சமூகத்தொடர்பு நாள்' குறித்தும் தன் உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை, 'அஞ்சாதே, நான் உன்னோடு இருக்கிறேன்'  என்ற இந்நாளுக்கான தலைப்பையும் எடுத்துரைத்து, சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்குடன், எவ்வித முற்சார்பு எண்ணங்களும் இன்றி, நம்பிக்கையையும் பற்றுறுதியையும் விதைத்து, தகவல் துறை செயல்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.