2017-05-29 16:11:00

நற்செய்தியை அறிவிப்பது கடமை மட்டுமல்ல, கௌரவமும்கூட‌


மே,29,2017. மனித குலமனைத்தும் நற்செய்தியைப் பெறவேண்டும் என்ற நோக்குடன் செயலாற்றுவதே, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் இருக்கும் கடமை, மற்றும் உயரிய அங்கீகாரம் என இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அல்லேயா வாழ்த்தொலி உரைக்கு செவிமடுக்க வத்திக்கானின் தூய பேதுரு பேராலய வளாகத்தில் இஞ்ஞாயிறு கூடியிருந்த மக்களுக்கு, இயேசு, விண்ணகத்திற்கு எழுந்துசென்ற திருவிழாவின் மையப்பொருளுடன் உரையாற்றிய திருத்தந்தை, இயேசு கிறிஸ்துவின் அன்பையும் அக்கறையையும் மனித குலத்திற்கு அறிவிக்க வேண்டியது நம்மை சார்ந்துள்ளது, எனினும், அதற்கு தூய ஆவியாரின் துணை இன்றியமையாதது எனவும் எடுத்துரைத்தார்.

முதன்முதலில் சீடர்களை அழைத்து ஒரு சிறிய குடும்பமாக உருவாக்கிய அந்த கலிலேயாவிலிருந்து இயேசு விண்ணகம் ஏறிச் சென்றார் என்பதை நினைவூட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தந்தை வழங்கிய பணியை இயேசு நிறைவுக்குக் கொணர்ந்துள்ள இந்த விண்ணேற்பு நேரத்தில்தான், நற்செய்தியை உலகுக்கு எடுத்துச் செல்லும் நம் பணி துவங்குகின்றது எனவும் கூறினார்.

பாடுகளையும் மரணத்தையும் கண்டதால் அச்சத்திலிருந்த சீடர் கூட்டத்திடமே நற்செய்தி அறிவிக்கும் பணியை விட்டுச்செல்கிறார் இயேசு, ஏனெனில் இவ்வுலகில் இனிமேல் இயேசுவின் பணியை தொடர்ந்து எடுத்துச் செல்லவேண்டியவர்கள் அவரின் சீடர்களே எனவும் உரைத்தார் திருத்தந்தை.

உயிர்த்த இயேசுவின் துணைகொண்டும், தூய ஆவியாரின் வழிகாட்டுதலுடனும் நற்செய்தியை உலகின் எல்லை வரை, உலகம் முடியும் வரை எடுத்துச் செல்லவேண்டிய கிறிஸ்தவர்களின் கடமையையும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.